சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி என்பவர். இவர் வீட்டின் அருகில் வசித்து வந்த சிறுமி ஒருவருக்கு மதுபழக்கத்தை ஏற்படுத்தி, கடந்த 2017ம் ஆண்டு கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து திருப்பூரில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குமுதவல்லி, கல்பனா, சந்தியா, உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் முதல் குற்றவாளி சரண்யாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு 10 வருட சிறை தண்டனையும், 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சசிகலா தீர்ப்பளித்தார். மேலும் குமுதவல்லி, கல்பனா ,மணி, ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும், 3 வருடம் சிறை தண்டனையும், தலா 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கின் மற்றொரு குற்றவாளியான சிவகுமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூபாய் 1 லட்சமும் அபராதம் விதித்த நீதிபதி, சந்தியா, பிரதாப் ஆகிய இருவரை விடுவித்து உத்தரவிட்டார்