காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கம், திருமாவளன் மோதல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கூட்டம் ஒன்றில் இந்துக் கோவில்கள் குறித்தும் அங்குள்ள சிற்பங்கள் குறித்தும் மோசமாகப் பேசியதாக இரு நாட்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தமிழகப் பிரிவு வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்த காயத்ரி ரகுராம்,திருமாவளவனை அதில் கடுமையாக விமர்சித்திருந்தார். தொடர்ந்து திருமாவளவன் ஊடங்களில் பேசியதைப் பகிர்ந்துவந்த அவர், பிறகு அவர் தன்னுடைய எண்ணை எல்லோருக்கும் பகிர்ந்து தனக்கு போன் செய்யச் சொல்லியிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
திங்கட்கிழமை காலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் அவரது வீட்டை முற்றுகை இட்டனர். இந்த நிலையில், காயத்ரி ரகுராம் ட்விட்டர் விதிமுறைகளை மீறியிருப்பதால் அவரது கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. ட்விட்டரில் காயத்ரி ரகுராமை மூன்றரை லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர்.
காயத்ரி ரகுராம் தற்போது சென்னையில் இல்லை. வரும் நவம்பர் 27ஆம் தேதி காலை பத்து மணிக்கு மெரினா கடற்கரைக்கு வரவிருப்பதாகவும் திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் அங்கே வந்து இந்துக்களைப் பற்றித் தவறாகப் பேசட்டும் எனக் கூறியிருந்தார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸும் தனக்கு ஆதரவாக வரவேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது