பெண் எனும் பெருமிதம் x இளிவரல்(Female Pride and Prejudice)

பெண் எனும் பெருமிதம் x இளிவரல்
(Female Pride and Prejudice)

கட்டுடலின் வாளிப்பில் கச்சிருக்கையில் கரும்பானாள்
கட்டுடைந்து கைக்குழந்தை வைச்சிருக்கையில் வேம்பானாள்
துணையிழந்து உருக்குலைந்து வைதவ்யத்தில் சருகானாள்
வலியழிந்து பயன்விளையா வயோதிகத்தில் துரும்பானாள்
பெண் எனும் உடைமை.

உயிர் தோற்றி ஊன் உருக்கி ஈன்று புறந்தரும் தாய்
உண்கவளம் முன்ஊட்டி உடன்வளர்த்த தமக்கை
உறவு தளிர்க்க உளம்நெகிழப் பாசம்பொங்கும் தங்கை
இடைவந்து இறுதிவரை ஒன்றிக் கரையும் மனைவி
அன்பின் வழியது உயிர் உயிரின் தொடராய் மகள்
உலகம் யாவையும் தன்னச்சில் இயக்கும்
பெண்எனும் மனுஷி

வகைபலவாய் வாகனங்கள் இயந்திரங்கள் இயக்குகிறாள்
மலைச்சிகரம் கடலாழம் எங்கும்கொடி நாட்டுகிறாள்
வலைப்பந்தா தடகளமா வலுத்தூக்கா நாடுபல வெல்லுகிறாள்
விண்ஏறி வான்வெளியில் ஆய்வுகளை நிகழ்த்துகிறாள்
உலகப்புகழ் நிறுவனங்கள் உயர்தரமாய் நடத்துகிறாள்
தலைமையேற்று அச்சமின்றி அரசுகளை ஆளுகிறாள்
பெண் எனும் சாதனை

ஒருசமயம் போதகுரு ஆவதற்கு முழுத்தடை விதிக்கிறது
ஒருபிரிவு வெளியுலகப் பார்வைக்கு முகத்திரை இழுக்கிறது
மரபுவழி பழக்கங்கள் விதிமுறைகள் சமநிலையை மறுக்கிறது
பெருநாள் திருநாளில் அமங்கலி முன்னிலையைத் தடுக்கிறது
பதினெண் படியேறி வணங்குதற்கு வழிநடையோ அடைக்கிறது
பெண் எனும் சங்கடம்

வெ .பெருமாள்சாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!