சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

                

              மாம்பழம், வெண்பட்டு வேட்டி, வெள்ளி கொலுசு தயாரிப்பு மட்டும் சேலத்துக்கு புகழ் சேர்க்கவில்லை… ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தியிலும் சேலம் அகில இந்திய அளவில் முக்கிய இடம் வகிக்கிறது.

ம     த்திய அரசு கடந்த 1999-ஆம் ஆண்டு பல வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது. 

         இதன் காரணமாக புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருள்களை மற்ற பகுதியினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படுகின்றன. 

அந்த வகையில்,ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில் சேகோசர்வ் ஆர்வம் காட்டி வருகிறது.

மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் தமிழகம் 

             மரவள்ளிக் கிழங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு பிரதான உணவு பயிராகவும்,ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்காவில் தொழில் துறை சார்ந்த பயிராகவும் பயிரிடப்படுகிறது.
          சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மரவள்ளிகக் கிழங்கு பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 85,000 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி 20 லட்சம் மூட்டைகளும், ஸ்டார்ச் மாவு 7 லட்சம் மூட்டைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

     மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் ஹெக்டேர் ஒன்றுக்கு 27.92 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து இந்தியா உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
இந்தியாவில் மிக அதிகபட்ச அளவான ஹெக்டேர் ஒன்றுக்கு 38 மெட்ரிக் டன் மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்து தமிழகம் சாதனை படைத்துள்ளது. 

சேலத்தில் தயாராகும் ஜவ்வரிசி

         இந்தியாவில் மரவள்ளி கிழங்கில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 90 சதவீத ஜவ்வரிசி, தமிழகத்தில், குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளில்தான் தயாரிக்கப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு பயிரிடுதல் மற்றும் உற்பத்தி செய்யும் அளவில் கேரளம் முதலிடம் பிடித்தாலும்,மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு தயாரிப்பில் நாட்டின் தேவையில் 80 சதவீதத்தை நிறைவு செய்து,தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தாலும்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சேகோ ஆலைகள் இயங்கி வருகின்றன. 

கலப்படத்தால் விலை வீழ்ச்சி 

        கடந்த சில ஆண்டுகளாக அதிக உற்பத்தி காரணமாக ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவுக்கு போதிய விலை கிடைக்காமல் இருந்தது. மேலும், கலப்பட ஜவ்வரிசி தயாரிப்பும் சந்தையில் விற்பனைக்கு வந்தது. இதனால் அகில இந்திய அளவில் அதிக அளவில் விற்பனையாகி வந்த சேலம் ஜவ்வரிசி, சந்தையில் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதனால் சந்தையில் நல்ல விலை கிடைக்க சேகோசர்வ் ஆலைகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. 

         சோளமாவு உள்ளிட்டவை கொண்டு கலப்படம் நடைபெறுவதைத் தடுக்க, முதற்கட்டமாக ஆலை உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. மேலும், கடந்த 2018 ஜூன் மாதம் முழுவதும் ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கலப்படம் தவிர்த்து ஜவ்வரிசியை நல்ல விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பேரில், சேகோசர்வ் சார்பில் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள், ஆலை உரிமையாளர் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், மரவள்ளி விவசாயிகளுக்கும், ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையே சேகோசர்வ் ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டு,இடைத்தரகர்கள் இடையூறு இன்றி, மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்வதற்கும், ஆலோசனை வழங்கவும் சங்க உறுப்பினர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.

ஆலைகளில் சிசிடிவி கேமரா

          சேகோசர்வ் உறுப்பினர்கள் ஆலைகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, சேகோசர்வ் மூலமாக அனைத்து ஆலைகளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு உற்பத்தியாளர்களுக்கும், மரவள்ளி விவசாயிகளுக்கும் சேகோசர்வ் புதிய மின்னணு ஏல முறை மூலம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நல்ல லாபம் கிடைத்தது.

          மேலும், ஆய்வுக்கூடம் உலகத் தரத்துக்கு உயர்த்தப்பட்டு என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூன் மாதம் சேகோவிற்கு அதிகபட்ச விலையாக மூட்டை ஒன்றுக்கு ரூ.6,440 விலை கிடைத்தது.

வட மாநிலங்களில் பிரபலமான ஜவ்வரிசி 

          வடமாநிலங்களில் நோன்பு காலங்களில் ஜவ்வரிசியை நோன்பு உணவாக எடுத்துக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கான உணவாகவும், மகாராஷ்டிரம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிச்சடி, உப்புமா, வடை போன்ற சுவையான சிற்றுண்டி உணவாகவும் உட்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் வட மாநிலங்களில் குறிப்பாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நேரடி விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், நடமாடும் வாகனம் மூலம் தமிழக மக்களிடையே ஜவ்வரிசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் தமிழகத்திலும் நேரடி விற்பனை செய்ய சேகோசர்வ் திட்டமிட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி 

       நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி விற்பனை செய்ய தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். விரைவில் நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

         மேலும் ஜவ்வரிசி புரதச்சத்து அதிகமுள்ள எளிதில் ஜீரணிக்கக் கூடிய சத்தான உணவுப் பொருள் என்பதால், ராணுவம், ரயில்வே, சிறைத் துறை, அரசு கல்லூரி விடுதிகளில் ஜவ்வரிசி விநியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநில நியாய விலைக் கடைகள், கூட்டுறவு அங்காடிகளில் ஜவ்வரிசி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற்று, அதன் மூலம் சந்தை வாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் சேகோசர்வ் ஈடுபட்டுள்ளது. 

         இதுதொடர்பாக, சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழிற்கூட்டுறவு சங்கம் (சேகோசர்வ்) தலைவர் என்.தமிழ்மணி கூறியது: கடந்த 2018-19 ஆம் ஆண்டில் சேகோசர்வ் ரூ.504 கோடி விற்பனை புரிந்தது. வரும் ஆண்டில் அனைத்து தொழிற் கூட்டுறவு சங்கங்களின் மொத்த விற்பனை இலக்கு ரூ.1,000 கோடியாகும். 2018-19 இல் அதிகமாக ரூ.2.98 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் (2019-20) சேகோசர்வ் அரசு நிர்ணயித்த விற்பனை ரூ.453 கோடியாகும். ஆனால் கடந்த நான்கு மாதங்களில் ரூ.345 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

       சேகோ மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி தொழிலில் 8 மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில், சுமார் 486 ஆலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். 

        அந்தவகையில், சேலம் ஜவ்வரிசி கலப்படம் இல்லாமல் தரமான ஜவ்வரிசியை தயாரித்து வழங்கும் வகையில், புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!