சிதம்பரம்கோவிலில்தீட்சதரால்தாக்கப்பட்டபக்தர்
சிதம்பரம் நகரின் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் லதா (51). இவர் சனிக்கிழமையன்று தன்னுடைய மகன் ராஜேஷின் பிறந்த நாளை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யச் சென்றார். அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனைக்கான பொருட்களைக் கொடுத்திருக்கிறார்.
லதா, தன் மகனுடைய பெயர், நட்சத்திரம் ஆகிய விவரங்களைத் தெரிவிப்பதற்குள் அர்ச்சனையை முடித்துவிட்டதாக, பொருட்களைத் திரும்பத் தந்திருக்கிறார் தர்ஷன்.
“இதனால், எந்த விவரத்தையும் கேட்காமல், மந்திரங்களை ஒழுங்காகச் சொல்லாமல் இப்படி அர்ச்சனை செய்து தருகிறீர்களே என்று கேட்டேன். அதற்கு ‘வேணும்னா நீயே மந்திரம் சொல்லிக்க’ என்றார். நானே மந்திரம் சொல்லனும்னா எதுக்கு நீங்க என்று கேட்டேன். அதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து, பிடித்துத் தள்ளிவிட்டார்” என பிபிசியிடம் நடந்த சம்பவத்தை விவரித்தார் லதா.
இதற்குப் பிறகு கோயிலில் இருந்த பக்தர்கள் ஒன்று திரண்டு, தர்ஷனிடம் இது குறித்து கேள்வியெழுப்பினர். “உடனே அவர் கழுத்தில் இருந்த சங்கிலியை நான் பிடித்து இழுத்ததாகவும் அதனால் அடித்ததாகவும் சொன்னார்” என்கிறார் லதா.
தீட்சிதர் தரப்பின் செயலரான பால கணேஷ் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை. கோயிலைச் சேர்ந்த வெங்கடேஷ் தீட்சிதரிடம் பேசியபோது, “இதைப் பத்தி சொல்றதுக்கு எதுவுமில்லை. போலீஸ்தான் இரண்டு தரப்பையும் சமாதானம் செஞ்சிருச்சே” என்றார்.லதா காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். பெண்களைத் துன்புறுத்துதல், அவதூறாகப் பேசுதல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தர்ஷன் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
“சம்பந்தப்பட்ட தீட்சிதர் மீது 3 பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்கைப் பதிவுசெய்திருக்கிறோம். தர்ஷன் அதற்குப் பிறகு வீட்டிற்கு வரவில்லை. தொடர்ந்து தேடிவருகிறோம்” என தெரிவித்தார் காவல்துறை ஆய்வாளர் முருகேசன்..