மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து சரிந்து விழுந்து அனுராதா என்ற பெண் விபத்துக்குள்ளாகியிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன. அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பணிக்கு செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர
வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கோல்டுவின்ஸ் பகுதி வழியே செல்லும்போது எதிர்பாராதவிதமாக கட்சி கொடி கம்பம்
சரிந்து விழுந்துள்ளது. அதைத் தவிர்ப்பதற்காக அவர் சடன் பிரேக் போட்டதில் வண்டி சறுக்கி கீழே விழுந்தவுடன், அந்த வழியே வந்த
லாரி அனுராதாவின் கால் மீது ஏறியதாக கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள கட்சி பிரமுகர்
ஒருவரின் இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள்
ஒட்டப்பட்டு கட்சி கொடி கம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன. அந்த கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்கு காரணமெனவும்,
அதனை காவல் துறையினர் மறைப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.