சிறுகதையின் ஆகப்பெரிய சவாலான வடிவக் கச்சிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். சிறுகதை கேட்டு இரு வாரங்கள் முன்பு நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். இத்துடன் ஒரு கதை இணைத்திருக்கிறேன். பிரசுரிக்க இயலாது என்று கருதுவீர்களானால் திருப்பி அனுப்பிவிடலாம். உடன், போதிய தபால் தலை ஒட்டப்பட்ட கவர் உள்ளது. தங்கள் அன்புள்ள…
புதிய அல்லது அறிமுக எழுத்தாளர்களிடம் எந்தப் பத்திரிகையும் கதை கேட்டுக் கடிதம் எழுதாது. பிரபலங்களிடம் மட்டும்தான். தவிரவும் கேட்டு வாங்கப்படும் கதைகள் எத்தனை கந்தரகோலமாக இருந்தாலும் தட்டி கொட்டி சரி செய்து அவசியம் பிரசுரிக்கப்பட்டுவிடும் என்பதுதான் தமிழ் வார இதழ் மரபு. இது சூடாமணிக்கும் தெரியும். ஆனாலும் அவர் அப்படித்தான். கடைசிவரை மாறவில்லை. அவரது பணிவு, அகங்காரமின்மை, எழுத்தில் அவர் கடைப்பிடித்த நம்பமுடியாத உயர் ஒழுக்க நெறிகள் ஆகியவற்றை வேறு யாரிடமும் காண முடியாது.
எனக்குத் தெரிந்து கல்கியில் நான் இருந்த எட்டாண்டு காலத்தில் அவர் எழுதிய எந்தச் சிறுகதையும் சராசரி – சுமார் என்று சொல்லத்தக்க தரத்தில் இருந்ததாக நினைவில்லை. நல்ல கதை என்று எங்களுக்குள் பேசிக்கொண்டால் அது குறைந்தபட்சக் கருத்து. பெரும்பாலும் அற்புதம் என்றுதான் சொல்லத்தோன்றும். அங்கே எனக்கு சீனியராக இருந்த இளங்கோவன், கதை எழுதும் ஒவ்வொருவருக்கும் சொல்லும் போதனை இதுதான்:’சூடாமணி மாதிரி எழுதப்பாருய்யா. வரலன்னா, எழுதாத.’
சிறுகதையின் ஆகப்பெரிய சவாலான வடிவக் கச்சிதம் அவரிடம் வெகு இயல்பாகக் கூடியிருந்தது. சற்றுப் பழமையான மொழிநடைதான். ஆனாலும் நாலு வரிக்குள் கதை நம்மை உள்ளே இழுத்துவிடும். செயற்கையான உச்சக்கட்டங்கள் இல்லாத இயல்பான படைப்பாக நெஞ்சில் நிறையும், விரியும்.
சூடாமணியை அவரது சிறுகதைகள் மூலம் மட்டுமே நான் அறிவேன். அநேகமாக அனைவருமே அப்படித்தான் அறிவார்கள் என்று நினைக்கிறேன். அவர் பொது இடங்களுக்கு, இலக்கியக் கூட்டங்களுக்கு வந்து பார்த்ததில்லை. பேட்டிகள் தந்ததில்லை. புகைப்படம் தரமாட்டார். அவர் வீட்டுக்கும் மிக நெருக்கமான ஒரு சில நண்பர்கள்தவிர யாரும் போயிருக்க முடியாது.
தான் என்பது தன் படைப்பு மட்டுமே என்று வாழ்ந்தவர். எழுத்தில் அவரது ஒரே நோக்கம், எழுத்து நேர்த்தி மட்டுமே. ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமலேயே வாழ்ந்தவர்.
ஒருமுறையாவது நேரில் பார்க்க நான் ஆசைப்பட்ட நபர்களுள் சூடாமணியும் ஒருவர். தொலைபேசியில் மட்டுமே அவருடன் பேசிப்பழக்கம். கிழக்கு தொடங்கியபிறகு, சிறுகதை கேட்பது என்னும் பணி இல்லாது போய்விட்டதால் அந்தத் தொடர்பும் நின்றுவிட்டது.
இனி கேட்டாலும் கொடுக்க அவரில்லை.
பா.ராகவன்