வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை: தமிழக அரசு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த ஜனவரியில் போராட்டம் நடைபெற்றிருந்தது. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் பணியிடைநீக்கம், பணி மாறுதல் என பல நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். இந்நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க 1,579 பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயார் செய்துள்ளது. அதற்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
அதில் துறைரீதியான நடவடிக்கைக்கு ஆசிரியர் ஆளாகியிருக்கக் கூடாது என்பது முக்கியமான விதியாகும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுள் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது விதி 17 (b)யின் கீழ் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்பு ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு ரத்து செய்தபோதும் 17 (b) விதியின் கீழான குற்றச்சாட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் பதவி உயர்வுக்காக தேர்வான 1,579 பேரில் துறைரீதியான நடவடிக்கை நிலுவையில் இருப்பவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், போராட்டத்தில் பங்கேற்று துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.