உலக மலைகள் தினம்
உலக மலைகள் தினம்
டிசம்பர் 11 உலக மலைகள் தினம்
உயிரினங்களின் வாழ்க்கையில் மலைகள் முக்கிய பங்கைப் பெறுகின்றன. ‘சமவெளி பிரதேசங்களின் தண்ணீர் தொட்டி’ என்று மலைகள் வர்ணிக்கப் படுகின்றன. மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘மலைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
மலைகள், உலகத்திற்கு தேவையான தூய நீரினை அதிகபட்சமாக வழங்குவதுடன், மேலும் பல்வேறு வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும் பிரதான கேந்திர நிலையமாக விளங்குவதுடன், மனிதனின் வாழிடமாகவும் விளங்குகின்றன.
காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல், வெடிப்பு நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் இன்ன பிற காரணங்களினால் மலைகள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றன. இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 11ம் தேதி உலக மலைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
♪ உலக நிலப்பரப்பில் 27% பங்கிற்கு மலைகள் பரந்து வியாபித்துள்ள அதேவேளை உலக மக்களில் 12% பேர்களுக்கு தேவையான வாழ்க்கையை மலைகளே வழங்குகின்றன. ஆனால் உலகில் 50% -ற்கும் அதிகமானோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மலை வளங்களிலேயே தங்கியுள்ளனர்.
♪ மலை வாழ் மக்களில் 80% ற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்கின்றனர்.
♪ உலகில் 80% ற்கும் அதிகமான தூய நீரானது மலைகளிலிருந்தே கிடைக்கின்றது.
நம் நாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியாக, மேற்கு தொடர்ச்சி மலை மிகவும் முக்கியமானவை. அதிலும் தொன்மை வாய்ந்த நீலகிரி, நம் பண்பாட்டோடு இணைந்த குறிஞ்சி நிலப்பகுதியாக காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நீலகிரி மலைப்பகுதியில் பல்வேறு இயற்கைச் சீற்றங்களாலும், செயற்கைக் காரணங்களாலும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது.
உலகளவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, உலகில் உள்ள மிகவும் பழமையான மலைகளின் உயரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையிலுள்ள பல மலைகளுக்கும் பொருந்தும்.
பண்டைய கால மக்கள், மலைகளை புனித இடமாகவும், உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் நினைத்தனர். ஆனால், தற்போது இதனுடைய நிலை தலைகீழாக மாறி வருகிறது. அதாவது மலைப்பகுதிகளை மக்கள் தங்கள் வாழிடமாக மாற்றி வருகின்றனர். இதனால் வெப்பமயமாதல் காரணமாக காட்டுப்பகுதிகள் அழிவடைந்து வருகின்றன. இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், அரியவகை மூலிகைகளை பாதுகாப்பதற்காகவும், சுத்தமான காற்றை பெறுவதற்காகவும் மலைகளின் உதவி முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.