திரைப்படத்திற்கு அடிமையான சமூகத்தில் கவிதைக்கு உரிய இடம் இல்லை..!
திரைப்படத்திற்கு அடிமையான சமூகத்தில் கவிதைக்கு உரிய இடம் இல்லை..!
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
ஐக்கிய நாடுகள் சபை ஒருவன் ஓர் ஆண்டில் ஏறத்தாழ இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் வாசிப் பவனாக இருக்க வேண்டும் என்று ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 35 பக்கங்களிலிருந்து 40 பக்கங்களுக்கு உள்ளாகத்தான் இருந்தனவே தவிர நாற்பது பக்கங்களைத் தாண்டிப் படிக்கின்ற தொகை மிகவும் குறைவு. “பட்டதாரிகளிடத்திலே கூட படிக்கின்ற ஆசை பட்டுப்போய் விட்டது” என்று முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகன் ஒருமுறை குறிப்பிட்டார்.
பட்டதாரிகளின் எண்ணிக்கையையும் நூல் நிலையங்களுக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பட்டதாரிகளின் எண்ணிக்கையை விட மற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும் நாம் உணரலாம். எனவே படித்தவர்களே நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை எடுத்துப் படிப்பதில்லை. அப்படியே படிப்பவர்களும் ஒரு தேவைக்கு படிக்கின்றார்களே தவிர தேவைக்கு மேல் செல்வதில்லை. கற்றவர்கள் படித்தால்தான் அவருடைய கல்வி வளரும், அவரிடம் கற்பவரிடமும் கல்வி வளரும். தமிழகத்தில் மாவட்ட நூலகம், மைய நூலகம், சிற்றூர், பேரூர் நூலகம், கிளை நூலகம், தனியார் கல்லூரி நூலகங்கள், கோவில் நூலகங்கள் என்ற ஏராளமான அமைப்புகளிலே நூலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் மக்கள் எண்ணிக்கை யோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நூலகங்கள் குறைவாக உள்ளன. இருக்கின்ற நூலகங்களில் வாங்குகின்ற நூல்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கின்றன. தமிழகத்தில் பல திரையரங்குகளில் அமருவதற்கு இடமில்லாமல் கூட்டம் நிரம்பி வழிவதையும் பார்க்கின்றோம். இத்தோடு நூலக இயக்கங்களை இணைத்துப் பார்க்கின்றபோது நமக்கு கவலை உண் டாகிறது. வாசிப்புக் குறைவுக்குக் காரணம் என்ன? வாசிப்புக் குறைவிற்கு முக்கியக் காரணம் தொலைக்காட்சி அலைவரிசைகள். 35 விழுக்காடு வாசகர்கள் இதனால் வாசிப்பை இழந்து விடுகின்றார்கள்.
திரைப்பட விருப்பத்தினால் 35 விழுக்காடும், 25 விழுக்காடு வருவாய் போதாமையினாலும், 20 விழுக்காடு நூல்களின் விலை அதிகமாக இருப் பதினாலும், 15 விழுக்காட்டினர் வாசிக்கும் சூழல் இல்லாததினாலும், 10 விழுக்காட்டினர் வாசிக்கும் தேவை இல்லாததினாலும், 0.8 விழுக்காட்டினர் வாசிப்புக்கு சமூக மதிப்பின்மை காரணமாகவும், 0.7 விழுக்காட்டினர் காசுக்கு அலைவதே வாழ்க்கை என்றாகிப் போனதாலும் வாசிப்பு அருகிப் போய் விட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாசிப்புக் குறைவிற்குக் காரணங்கள் உள்ளதைப் போல வாசிப்பை வார்த்தெடுக்கும் காரணங்கள் உள்ளனவா எனும் கேள்வி நமக்கு எழுகிறது. புத்தகங்களைப் படிப்பதற்குப் பதிலாக வேறு என்ன செய்யலாம் என்று எண்ணுகிறபோது இணையதளங்கள் உதவிக்கு வருகின்றன. ஊடகங்கள் துணைக்கு வருகின்றன. சென்னையில் மிகப்பெரும் புத்தகக் கடைகள் மூடப்பட்டுவிட்டன.
லேண்ட் மார்க் பெரும் அங்காடிகளில் மூன்று தளங்களில் இருந்தன. அவையெல்லாம் ஏன் மூடப்பட்டன? பெருமளவில் கல்வியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் இருக்கக்கூடிய ஒரு தலைநகரத்தில் புத்தகக் கடைகள் மூடப்பட்டதன் காரணம் என்ன? புத்தகங்களை இணையதளங்களின்
மூலமாகப் பெற்றுக்கொள்ள முடிவதனாலும், இணை யத்திலேயே பதிவிறக்கம் செய்து படிப்பதனாலும் புத்தக விற்பனை குறைந்துள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது இப்போது மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்று மாறிவிட்டது. கூகுளுக்குப் போனால் எல்லாம் படித்துக் கொள்ளலாம் என்றாகி விட்டது. இணையதளத்தைப் பயன்படுத்துகிற, மடிக்கணினியை வைத்திருக்கின்ற பொருளாதார வசதியைப் பெற்றவர்கள் மிகக் குறைவானவர்கள்.
மடிக்கணினியை வைத்து கூகுளிலே தேடிப் படித்தாலும் மடியில் ஒரு புத்தகத்தை வைத்துப்
படிக்கின்ற மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தராது. மடியில் ஒரு கணினியை வைத்திருப்பதற்கும், ஒரு குழந்தையை வைத்திருப்பதற்கும் வேறுபாடு இல்லையா? மடியில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்றது புத்தகங்களை வைத்துப் படிப்பது. நமக்கு ஒவ்வாத சூழல் வாய்க்கின்றபோது இயந்திரத்தைத் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் குழந்தையை அவ்வாறு தூக்கி எறிய இயலாது. இணையத்திலும் தேவை கருதிப் படிப்பவர்கள்தான் இருக்கிறார்கள்.
போட்டித் தேர்வுக்குப்
படிப்பது, கல்லூரி பட்டம் பெறப் படிப்பது, பதவி உயர்விற்காகப் படிப்பது என்று படிப்பு குறிப்பிட்ட எல்லைக்குள் சுருங்கி விட்டது. நல்ல மனிதனாக, பண்புடையவனாக வருவதற்கு, நல்ல குடிமகனாக விளங்குவதற்கு, நல்ல சமுதாய உறுப்பினராக இருப் பதற்கு, நல்ல மனநலம் வாய்ந்தவனாக இருப்பதற்கு படிக்க வேண்டும் என்ற நோக்கம் பெரும்பாலானவருக்கு இருப்பதில்லை. இத்தகைய நோக்கம் இருந்தால் புத்தகங்களைத் தேடி மக்கள் போவார்கள். புத்தகச் சந்தையில் நாம் காணும் அவலம் என்னவென்று சொன்னால் புத்தக அரங்கினுள் இருக்கின்ற கூட்டத்தை விட வெளியே காட்சிப்படுத்தப்படுகின்ற பொருளைப் பார்ப்பதற்கும், உண்பொருள்களை வாங்கி உண்பதற்கும், நகைச்சுவையான பேச்சு வெளியே நடைபெற்றால் வேடிக்கை பார்ப்பதற்கும் வருகின்ற கூட்டமே அதிகமாக இருக்கிறது.
புத்தகக் காட்சிக்கு மக்களை வரவைப்பதற்காகக் காட்டுகின்ற வேடிக்கை விநோதங்கள், நிகழ்ச்சிகளே சிலவேளைகளில் புத்தகக் காட்சி நடத்துவதன் நோக்கத்தை வீழ்த்தி விடுகிறது. நிகழ்ச்சியைப் பார்த்து அரங்கினுள் செல்லாதவர்கள், உள்ளே சென்றாலும் பிரபலங்கள், நட்சத்திரங்களைப் பார்க்க அவசர, அவசரமாக வெளியேறி விடுகின்றார்கள். இந்த வகையில் புத்தகக்
காட்சிகள் பெறவேண்டிய வெற்றியைப் பெறவில்லை என்றே தோன்றுகிறது. 11 கோடிக்கு விற்பனை நடப்பதாகக் கூறுகின்றார்கள்..
சராசரியாக நாம் சந்திக்கின்ற மனிதர்களிடையே நடைபெறும் உரையாடல்களில் திரைப்படம் இடம் பெற்றிருக்கின்ற அளவு, அரசியல் இடம்பெற்றிருக்கின்ற அளவு நூல்களைப் பற்றிய கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றனவா என்று கேட்டால் ஏமாற்றம் தருகின்ற விடையைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டிவரும். நூல்களைப் பற்றி பேசுகின்ற பழக்கம் இங்கு இல்லை. வருகின்ற பத்திரிகைகளும் பார்க்கும் அளவிற்கான பத்திரிகைகளாக இருக்கின்றன. படிப்பதற்கான பத்திரிகைகள் இல்லை. நல்ல சிறுகதைகளை வெளியிட்ட இதழ்களெல்லாம் இன்று ஒரு பக்கக் கதை, அரைப்பக்கக் கதை, நொடிக்கதை என்றெல்லாம் போடுவதைப் பார்க்கின்ற போது நம்முடைய இலக்கிய வாசிப்பு எங்கே போகிறது என்பதை அவதானிக்கலாம்.
மக்கள் எதற்கு இலக்கியத்தைத் தேடுகிறார்கள்? ஒரு பண்பட்ட மனநிலையைப் பெறுவதற்காகவோ, பண்பட்ட மனநிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவோ, பண்பட்ட நிலையை மற்றவர்களிடத்தில் உருவாக்குவதற்காகவோ நோக்கமாகக் கொண்டு படிக்கின்றவர்கள் யாரும் இல்லை. பிரான்ஸில் கதை படிக்கின்ற பழக்கம் ஒரு காலத்தில் குறைந்துவிட்டது. ஏன் குறைந்து விட்டது என ஆராய்ந்து அதற்கு தொலைக்காட்சி அலைவரிசைதான் காரணம் என்பதை உணர்ந்த அந்த ஊர் மக்களே திரண்டுபோய் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இணையத்தில் நல்ல செய்திகளைவிட தீய செய்திகளே அதிகம் இருக்கின்றன. அலைப் பேசியை வைத்து பிள்ளைகள் என்ன பார்க்கின்றார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க முடிகிறதா?
அறைக்குள் கதவைச் சாத்திக் கொண்டு அவர்கள் எதையெல்லாமோ பார்க்கிறார்கள். திரைப்படங்களில் அரசாங்கம் தணிக்கைக் குழு அமைத்து ஆபாசமான வசனங்களை, வன்முறைக் காட்சிகளை நீக்குகிறது. ஆனால் ஒரு விளம்பரத்திற்கு இதுபோன்ற ஒரு தணிக்கையை ஏன் செய்வதில்லை? யூடியூப் வழியாக, இணையத்தின் வழியாக வருகின்ற படங்களுக்குத் தடைவிதிப்பதில்லையே ஏன்? வர்த்தகச் சூதாடிகள் கையில் இந்த ஊடகங்கள் இருக்கின்றன. சமூகம் கெட்டுப்போனால் வர்த்தகச் சூதாடிகளுக்கு இலாபம் அதிகம். அன்றாடம் வேலைசெய்யும் தொழிலாளிகள் கூடி அமர்ந்து அலைப்பேசியில் பார்த்து இரசிப்பதை நான் பார்த்திருக்கின்றேன். வள்ளுவரின் கருத்தையா அவர்கள் அதில் பார்க்கிறார்கள்? ஆபாசக்காட்சிகளைப் பார்த்து அவர்கள் சீரழிந்து போகின்றார்கள்.
நம் நாட்டிற்குள் எதெல்லாம் அனுமதிக்கப்பட்டது எவையெல்லாம் தடுக்கப்பட்டது என்று நிறுவனங்களுடன் கட்டுப் பாட்டு விதியை அரசாங்கம் போட வேண்டும். ஆனால் இதுகுறித்து கற்றவர்களுக்குக் கூட அக்கறை இல்லை. கவிதையைப் பொருத்தவரை எந்தவொரு இலக்கியத்திற்கும் அந்தளவு வாசிப்புத்தளம் இல்லை. பெரிய நாவலாசிரியர்கள், சோர்வுற்ற நிலையில் இருக்கின்ற மூத்த எழுத்தாளர்கள், இடையில் இருக்கும் எழுத்தாளர்கள், வளரும் நிலையில் உள்ளவர்கள் என்று பார்க்கலாம். ஒரு நூலை அச்சடிக்கும்போதே மலையாளத்தில் ஐயாயிரம் படிகள் போடுகின்றார்கள்.
மக்கள் குழு இதனைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். அரசாங்க அதிகாரிகள் அல்ல. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்ற அறிவாளிகளும் அல்ல. அறிஞர்களை அழைத்து இந்த நூலை வாங்கலாமா என்று கேட்டு ஐயாயிரம் படிகளை கேரள அரசு வாங்கிக் கொடுக்கிறது. அந்த மக்கள் மீது அரசுக்கு நல்ல எண்ணம் இருக்கிறது, நம்பிக்கை இருக்கிறது என்பது பொருள். தமிழகத்தில் 600 படிகள் அரசு வாங்குவது
உறுதியாகவில்லை. நூறு இருநூறு படிகளையே பதிப்பகத்தார்கள் அச்சடிக்கின்றார்கள். அரசு ஆணை வந்ததும் எஞ்சிய படிகளை அச்சடிக்கின்றார்கள்.
அறிவுச் சூழலை உருவாக்குகின்ற நூல்களுக்கு தமிழகத்தில் இவ்வாறான இடம் இருப்பதைப் பார்க்கிறோம். கவிதைகளைப் படிப்பதற்கென்றே ஊர்தோறும் இளைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்குரிய கவிதையைப் படிப்பார்கள், அந்தக் கவிஞனைக் கொண்டாடுவார்கள். இத்தகைய குறுங்குழுப் போக்கு மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகம். இங்கு குறுங்குழுப்போக்கு அவதூறுகளைப் பரப்புவதாகவும், பொறாமைகளை வளர்ப்பதாகவும், தீய எண்ணங்களுக்கு வித்திடுவதாகவும், கோள் சொல்வதாகவும் அமைகிற தன்மையுடையதாக இங்கு இருப்பதைப் பார்க்கிறோம்.
மற்ற மாநிலத்தில் கவிஞனைப் பாராட்டுவதை சமூகப் பண்பாடாகக் கருதுகிறார்கள். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் இந்திய தேசிய அளவில் கவியரங்கம் நடத்தினார்கள். தமிழுக்கு என்னை அழைத்தார்கள். மிக உயர்ந்த விடுதியில் கவிஞருக்கு விழா நடத்தினார்கள். அரசே அவ்வளவு மரியாதை செய்தது. கவிஞர்களுக்கு மரியாதை செய்தார்கள். பத்திரிகைகள் மரியாதை செலுத்தின. அவ்விழா வில் திரைப்படப் பாடலாசிரியரும் வந்தார்கள். சென்றார்கள். ஆனால் தமிழகத்தில் திரைப்படத்தைச் சார்ந்தவர்கள் வந்தால் அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிடுகிறது. ஆனால் கேரளத்தில் அப்படியில்லை.
கவிஞர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். அதனை ஒரு சமூகப் பண்பாடாக வைத்திருக்கிறார்கள். கர்நாடகாவில் சித்தராமையா பதவி ஏற்றவுடன் அனந்தமூர்த்தி என்ற சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரிடம் வாழ்த்து வாங்கினார். கேரளாவில் திருவனந்தபுரத்திலுள்ள அ.மாதவன் என்ற எழுத்தாளார் தமிழுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றாலும், கேரள பூமியில் இருப்பதால்
திருவனந்தபுரம் நகர் மன்றத் தலைவர் முதலில் வந்து வாழ்த்தினார். அமைச்சர் வந்து வாழ்த்திபா பூச்செண்டு கொடுத்தார். தமிழகத்தில் இதனை எதிர்பார்க்க முடியுமா? ஜெயகாந்தன் இறந்தபோது எந்தவித மரியாதையும் இங்கு இல்லை.
ஒரு படைப்பாளியை, கவிஞனை நாங்களும் மதிக்கின்றோம் என்று அரசு வெளிப்படுத்துவதன் அடையாளம்தான் அது. இங்கு அதுகூட இல்லை. இந்தச் சூழலில்தான் கவிதையை வளர்த்தெடுக்க வேண்டி இருக்கிறது. நான் இன்னும் கவியரங்குகளை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றேன். சென்னையில் முருகு சுந்தரம் என்ற தோல் மருத்துவர் இருக்கின்றார். அவருக்கு கவிதை ஆர்வம் உண்டு. நாணல் என்ற அமைப்பை வைத்து மாதம் ஒரு தலைப்பைக் கொடுத்து கவிதைகளைப் பாட வைக்கின்றோம். மருத்துவர் உள்பட கவிஞர்கள் வருகிறார்கள். சென்னையில் புதுக்கல்லூரியில் சேர்ந்த புதிதில் நான் வைகறை என்றொரு அமைப்பை நடத்தினேன்.
வாணியம்பாடியில் அப்துல்ரகுமான் கவிதை அமைப்பை நடத்தினார். கிறித்தவக்கல்லூரியில் வனம் என்றொரு கவிதை அமைப்பை நடத்தினார்கள். நடத்துபவர்கள் இருந்து இளைஞர்களை ஊக்கப்படுத்தி அரவணைக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஏராளமானவர்கள் வாசிக்கின்றார்கள். நாம் அவர்களை ஒதுக்கிவிட்டால் குற்றம் யாருடையது? கவிதையை மீட்பது, கவிஞர்களை மீட்பது, கவிதையை இரசிப்பவர்களை மீட்பது என்பதெல்லாம் சமூகத்தளத்தில் உருவாக வேண்டும். ஒரு படத்தைப் பற்றி நூறுபேர், ஆயிரம்பேர், பல்லாயிரம்பேர்
பேசுவதுபோல் இந்தமாதம் வெளியான ஒரு கவிதையைப் பற்றிப் பேசும் மனநிலை நம் சமூகத்தளத்தில் இல்லையே…! இத்தகைய இடர்பாடான ஒரு சூழலில்தான் நம்முடைய கவிதைகளையும் நாம் வளர்க்க வேண்டும், கலைகளையும் வளர்க்க வேண்டும், வாசிப்புப் பழக்கத்தையும் வளர்க்க வேண்டும்.
நம் சமூகத்தை மேம்படுத்த வேண்டும். மக்களிடம் ஏராளமான வரிப்பணம் வாங்குகின்ற, புத்தகங்களுக்கென்ற ஒவ்வொரு வீட்டிலும் வரியை வாங்குகின்ற அரசாங்கம் வாங்குகின்ற பணத்தை நூலகத்திற்காகவே செலவு செய்ய வேண்டும். வரியை வாங்கிவிட்டு நூலகங்களை மூடுவதும், எண்ணிக்கையைக் குறைப்பதும், நூலகப் பயிற்சி பெறாத ஒருவரை இயக்குநராக அமர்த்துவதும் நூலக வளர்ச்சிக்கும், நூல் படிக்கின்ற ஆசைக்கும் குறுக்கே நிற்கின்ற தடைகள்தாம்.
நூலகங்களில் கலந்துரையாடலுக்கென்று ஓர் அரங்கம் இருக்க வேண்டும். பத்திரிகைகள் வாசிப்பதற்கு நல்ல அரங்கம் இருக்க வேண்டும். இதற்கான ஏற்பாட்டைச் செய்வது அரசாங்கத்தின் கடமை. நூல்களை ஒட்டுமொத்தமாக வாங்கி அரசாங் கமே நூலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆனால் இங்கு புத்தகத்தை அச்சடிக்கின்றவர்கள்தான் அதனைக் கட்ட வேண்டும், வண்டியில் ஏற்ற வேண்டும், வாடகை கொடுக்க வேண்டும், அனுப்பி வைக்க வேண்டும் பிறகு அரசாங்கத்தின் மூலமாக நமக்கு மாவட்ட நூலகங்களின், கிளை நூலகங்களின் மூலம் பணம் வருவதற்கு சிலகாலம் ஆகிவிடுகிறது. ஆசிரியரும், அச்சடிப்பவரும் நொந்து நூலாகிப் போய் விடுவார்கள்.
நன்றி: சமரசம்