களம் விரைவு செய்திகள்.
பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ.. கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி
சென்னை: சென்னையில் பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சென்னையில் சுபஸ்ரீ பேனர் விழுந்து பைக் விபத்தில் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கரணையில் இந்த சம்பவம் நடைபெற்றது. சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார்.
கட் அவுட் முகத்தில் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, லாரி டயரில் சிக்கி பலியானார். இதன் வழக்கு விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுபஸ்ரீ குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகர் பகுதியை சேர்ந்தவர். பி.டெக் படித்துள்ள இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அதே சமயம் இவர் கனடாவில் மேற்படிப்பு படிப்பதற்காக தீவிரமாக முயன்று வந்தார். இதற்காக சில கல்லூரிகளில் அவர் விண்ணப்பம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான நுழைவுத்தேர்வை அவர் சில வாரங்கள் முன்பு எழுதினார்.
இந்த நிலையில் இந்த தேர்வில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் இவர் தேர்வாகி உள்ளார். இந்த சந்தோசமான செய்தியை தெரிந்து கொள்ள சுபஸ்ரீ தற்போது உயிருடன் இல்லை. இவரின் மரணமும், இந்த தேர்வு முடிவும் அவரின் குடும்பத்தை மொத்தமாக உலுக்கி உள்ளது.