பிரதமர் மோடி பேச்சு

 பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு


நியூயார்க்: தூய்மை இந்தியா திட்டத்திற்காக ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு  கடந்து 2014-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்த  நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’ ஸ்வாச் பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகளில்  கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம்  தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் நிறுவனம் உலக கோல்கீப்பர் விருது பிரதமர் மோடிக்கு  வழங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.

இந்நிலையில், ஒருவார கால பயணமாக அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டனில் கடந்த 23-ம் தேதி ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அமெரிக்க  வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அவருடன் அதிபர்  டிரம்பும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ஐநாவின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க  அவர் நியூயார்க் புறப்பட்டார். நேற்று முன்தினம் காலை நியூயார்க் ஜேஎப்கே சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஐநாவுக்கான  இந்தியாவின் நிரந்தர தூதர்  சயீத் அக்பரூதீன் வரவேற்றார். இந்நிலையில், ஐநாவின் 74வது பொதுச் சபை கூட்டம் நியூயார்க்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக,  பருவநிலை மாற்றத்திற்கான மாநாடு நடைபெற்றது.

ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ் தலைமையில் நடந்த இம்மாநாட்டில், பிரதமர் மோடி உள்ளிட்ட 75 நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை  அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் மெலிந்தா கேட்ஸ்  அறக்கட்டளை சார்பில் சர்வதேச சாதனையாளர் விருது ‘குளோபல் கோல்கீப்பர்’ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’  விருதை  உலக பணக்காரர் பில் கேட்ஸ் வழங்கி கவுரப்படுத்தினார்.

பிரதமர் மோடி பேச்சு:

விருது பெற்ற மகிழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, இந்த விருது எனக்கானது அல்ல. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை நிறைவேற்றியதுடன், அதனை தங்களது அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தால், ஏழை மக்களும், பெண்களும் அதிக பலன் பெற்றனர்.

‘பில் – மெலின்டா கேட்ஸ்’ தொண்டு நிறுவன அறிக்கையில், கிராமப்புற சுகாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், குழந்தைகளின் இதய பிரச்னை குறைந்துள்ளதாகவும், பெண்களின் உடல் நலம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துப்புறவு இலக்கை அடைவது மட்டுமல்லாமல், மற்ற இலக்குகளை அடையவும் உறுதியுடன் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘பிட் இந்தியா’ மூலம் உடலுறுதி மற்றும் உடல்நலனை பேணிக்காக்க ஊக்கப்படுத்தி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...