வேளச்சேரி- பரங்கிமலை ரயில் திட்டம்.. இன்று முதல் விடிவு
சென்னைவாசிகளின் 13 ஆண்டு கால கனவு.. வேளச்சேரி- பரங்கிமலை ரயில் திட்டம்.. இன்று முதல் விடிவு
சென்னைவாசிகளின் 13 ஆண்டு கால கனவு இன்று தான் நிறைவேற போகிறது.. வேளச்சேரி பரங்கிமலை ரயில் திட்ட பணிகளுக்கு பல ஆண்டுக்கு பின்னர் இன்று முதல் விடிவு பிறந்துள்ளது. பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு ராட்ச இரும்பு பாலம் அமைக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கி உள்ளன.
சென்னை மக்களின் கனவு திட்டம் என்றால் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை தான் சொல்ல வேண்டும். இந்த திட்டம் மட்டும் திட்டமிடப்பட்ட 2013ம்ஆண்டே முடிந்திருந்தால், சென்னையில் மிகப்பெரிய தொழிற்புரட்சியே ஏற்பட்டிருக்கும். ஏனெனில் தற்போது வேளச்சேரியில் இருந்து தாம்பரம் செல்ல பூங்கா அல்லது கோட்டை சென்று மாற வேண்டிய நிலை உள்ளது. இதனால் நீண்ட நேரம் ஆகிறது. வேளச்சேரி, பெருங்குடி, தரமணியைச் சுற்றித்தான் சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன.
ஓஎம்ஆர் பகுதிகள், ஈசிஆர் பகுதிகள், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி போன்ற சென்னையின் மையப்பகுதிகளுக்கு புறநகர் பகுதி மக்கள் செல்ல, பரங்கிமலை வேளச்சேரி ரயில் வழித்தடம் முக்கியமானதாகும். இந்த வழித்தடப்பணிகள் 495 கோடியில் 2008ம் ஆண்டு தொடங்கியது. 90 சதவீத பணிகள் வெறும் 3 ஆண்டுகளில் நடந்து முடிந்தது. ஆனால் ஆதாம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் வெறும் 500 மீட்டர் தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரே பரங்கிமலை வேளச்சேரி ரயில் வழித்தட பணிக்கு விடிவு காலம் பிறந்தது.
ஆனால் திடீரென தெற்கு ரயில்வே திட்டத்திற்கான மதிப்பீடு அதிகமாகி விட்டதாகவும், பணிகளை தொடர முடியாத நிலை இருப்பதாகவும் கூறியது. 495 கோடியாக இருந்த திட்டம் காலப்போக்கில் 730 கோடியாக உயர்ந்தது. அதன்பிறகு ஒருவழியாக ரயில்வே முழு தொகையையும் ஒதுக்கியது. தொடர்ந்து ஆதம்பாக்கம் பகுதியில் விறுவிறுப்பாக பணிகள் நடந்தன. மிக வேகமாக பணிகள் நடந்ததால் அந்த பகுதியிலும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. தற்போது பரங்கிமலை ரயில் நிலையத்தில் ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. 500 மீட்டர் தூரத்திற்கு ராட்ச கட்டர்கள் பொருத்தும் பணி இன்று தொடங்கி உள்ளது. இந்த பணிகள் இன்னும் 3 நாளில் நிறைவு பெறப்போகிறது.