தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – தீர்ப்பு வேதனை அளிப்பதாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் வருத்தம்! | தனுஜா ஜெயராமன்
தன்பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17) வழங்கியது.
தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மன வருத்தத்தை தந்துவிட்டதாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும், திருமணத்திற்கான உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பு உறுதிப்படுத்தவில்லை என்று ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக சொல்லியது, தங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி மற்றும் பி.எஸ் நரசிம்மா உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, நான்கு தீர்ப்புகளை வழங்கியது.
அமர்வில் நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில் மூன்று நீதிபதிகள் தன்பாலின சட்டத்தை அங்கீகரிப்பது நாடாளுமன்றத்தின் வேலை, சட்டமன்றங்களால் மட்டுமே இதற்கு தீர்ப்பளிக்க முடியும் .அதனால் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு, ஏமாற்றத்தை அளித்துவிட்டதாக தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் வருத்தம் தெரித்து வருகின்றனர்.