டி.எம்.சவுந்தரராஜன் திருருவ சிலையை திறக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

 டி.எம்.சவுந்தரராஜன் திருருவ சிலையை திறக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் இவரது திருருவ சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க இருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2013-ம் ஆண்டு, தனது 91-வது வயதில் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் காலமானார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

மேலும் அவரது புகழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மதுரையில் முழு திருவுருவச்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மதுரை தெற்கு வட்டம் முனிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டிட வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் முழு திருவுருவச் சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கவும், நாளை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்டச் செயலாளர் மணிமாறன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள். பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முனிச்சாலையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...