அமைதியாக இல்லாவிட்டால் அமலாக்கதுறை வீடு தேடி வரும்- அமைச்சர் மீனாட்சி லேகி!
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, வியாழக்கிழமை அன்று எதிர்க்கட்சி எம்.பி. ஒருவரிடம், ‘அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் அமலாக்கத்துறை உங்கள் வீடு தேடி வரும்’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற அவை விவாத்தின்போது அமைச்சர் மீனாட்சி லோகி அவையில் பேசிக்கொண்டிருந்தார் . அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குறுக்கிட்டார்.
இதையடுத்து மீனாட்சி லேகி அவரிடம், “ஒரு நிமிடம்… ஒரு நிமிடம்… அமைதியாக இருங்கள் அல்லது அமலாக்கத்துறை உங்கள் வீடு தேடி வரும்” என்று கூறினார். இதையடுத்து அவையில் சிரிப்பலை எழுந்தது. அமைச்சரின் இந்த பேச்சு மிரட்டும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டினர். அமைச்சரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சியினரை நோக்கி அமலாக்கத்துறையை பயன்படுத்துவோம் என்று அமைச்சர்கள் வெளிப்படையாகவே அச்சுறுத்துகின்றனர் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்களவையில் கடும் வாக்குவாதத்துக்கு நடுவே மீனாட்சி லேகி விடுத்த மிரட்டலானது புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது என்றும் பலர் காட்டமாக விளாசி வருகின்றனர்.