இரவில் மட்டுமே திறந்திருக்கும் ஸ்ரீகாலதேவி கோயில்!

 இரவில் மட்டுமே திறந்திருக்கும் ஸ்ரீகாலதேவி கோயில்!

ஒருவரின் நல்ல நேரத்தை யாராலும் கணிக்கவே முடியாது. அப்படிப்பட்ட நல்ல நேரத்திற்காக வணங்க ஒரு அம்மன் இருக்கிறது, ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்! அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமத்தில் உள்ளது. கோயில் நேரக் கோயில், அம்மன் காலதேவி.

நம் நல்ல நேரத்தைச் சொல்லும் சுழற்சி ராசிகள் 12, நட்சத்திரங்கள் 27 நவகிரகங்கள் 9 உள்ளது. அவை அனைத்தும் இந்த கால தேவி அம்மனின் ஆணைக்கு அடக்கம் என்பதைச் சொல்லும்படி மேற்கண்ட அனைத்தும் காலதேவி அம்மன் சிலையைச் சுற்றி அடக்கம். உற்று நோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். 

இதன் அர்த்தம் ஈரேழு புவனங்கள், பஞ்சபூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், காத்தல், அழித்தல், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய சக்தியாக விளங்குபவள் காலதேவி.

நேரத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய காலதேவிக்கு ஒருவரின் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தி உண்டு. இதுதான் இந்தக் கோயிலின் மிகப்பெரிய சக்தியாகவும், தத்துவமாகவும் விளங்குகிறது.

கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ‘நேரமே உலகம்’.

புராணங்களில் வரும் கால ராத்திரியைத்தான் இங்கு காலதேவியாகக் கருதுகின்றனர். நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடை திறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்குமுன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்.

அதிலும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். காலதேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை வலதிலிருந்து இடது புறமாக 11 முறை சுற்றி பின்னர், 11 முறை இடதிலிருந்து வலப்புறமாகச் சுற்றி வந்து, ஸ்ரீகாலதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட 11 நெய்விளக்கு ஏற்றியபின் கோயிலுக்குள்ளே சென்று கருவறைக்கு முன் உள்ள காலச்சக்கரத்தின் மீது அமர்ந்து 11 விநாடிகள் காலதேவிக்கு நேருக்கு நேராக நின்று தரிசனம் செய்தால் போதும். உங்களின் அனைத்து கெட்ட நேரமும் நீங்கி, நல்ல நேரம் பிறக்கும்  என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும்போது, ‘எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு, அவனைப் பழி வாங்கு’ என்கிற வேண்டுதல்கள் இல்லாமல்,

‘எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.

செல்லும் வழி: மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்புலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்லமுடியும். வழி தெரியாதவர்கள் பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு. இரவு நேரக் கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...