ஆகச்சிறந்த பண்பாளர் கவிஞர் சாமி பழனியப்பனார்
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரும் எழுத்தாளருமான சாமி பழனியப்பன் அவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழகத்துப் பெரியவர்களிடம் நல்ல நட்பில் இருந்தவர். புரட்சிக்கவி பாரதிதாசனுடன் இரண்டாண்டுகள் தங்கி அவர் உதவியாளராகவும் திருக்குறள் புரட்சி உரை அச்சுப்பணி பொறுப்பாளராகவும் செயல்பட்டவர்.
சாமி.பழனியப்பன் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். இவரது தந்தை உ.வே.சாமிநாதன் தீவிரமான சுயமரியாதைக்காரர். அதனால் இளமையிலிருந்தே சாமி பழனியப்பனார் சுயமரியாதை உணர்வுடன் வளர்ந்தார். இவர் எழுதிய கவிதைகள் அவரின் கவித்திறனை இன்றும் காட்டி நிற்கிறது. சாமி பழனியப்பனைப் பற்றி அவரது புதல்வர் கவிஞர் பழநிபாரதி கூறுகிறார் கேட்போம். (இன்று கவிஞர் சாமி பழனியப்பன் நினைவு நாள்)
“தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, கலைஞர், மு.வரதராசனார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், கவிஞர் கண்ணதாசன், குன்றக்குடி அடிகளார், கவிஞர் திருலோக சீத்தாராம் போன்ற பெருமக்களோடு பழகிக்களித்தவர் அப்பா சாமி பழனியப்பன்
மாணவப் பருவத்திலேயே இலங்கைக்குச் சென்று “வீரகேசரி” இதழில் பணியாற்றினார். அவர் ஆசிரியராக இருந்து நடத்திய “வாரச் செய்தி” , ” “தமிழகம்” பத்திரிகைகளில் எழுதிய தலையங்கங்களை அண்ணா அவரது “திராவிட நாடு” இதழில் மறுபிரசுரம் செய்திருக்கிறார்.
கையில் காசிருந்தால் நண்பர்களுக்கு காபி வாங்கிக் கொடுப்பார். இல்லையென்றால் வீட்டிலேயே இருப்பார். சாய்வு நாற்காலியில் அவர் அமைதியாகப் படுத்திருந்தார் என்றால் மனச் சுமையில் அல்லது பணச் சுமையில் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியும். அவரது சங்கடங்களை அதிகம் அறிந்தது சாய்வு நாற்காலிதான். அதுவும்கூட அவருக்காக அவர் வாங்கியதில்லை. என் தாத்தா செய்துகொடுத்தது. அம்மாவின் வாட்டமான முகத்தைப் பார்க்க கஷ்டப்பட்டால்…ஏதாவது ஒரு பதிப்பகத்தில் அல்லது பூங்காவில் போய் உட்கார்ந்துகொள்வார்.
அவரது தனிப்பட்ட சோகத்தை யார் மீதும் படரவிட்டதில்லை. வெள்ளை நிறத்திலன்றி வேறு நிறச் சட்டையணிந்து நான் பார்த்ததில்லை. கட்சிக் கூட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள் தவிர்த்து அவருக்குப் பொழுதுபோக்காக புத்தகங்களே இருந்தன.
அப்பா எனக்கு ஒரு கலைக்களஞ்சியம் போல. என் கேள்விகள் எல்லாவற்றுக்கும் அவரிடம் விடைகள் இருந்தன.
திருக்குறளுக்கு அவர் ஓர் இனிய உரை எழுதினார்.
தன் பேரன் பேத்திகளுக்கு அதில் கையெழுத்திட்டுக் கொடுத்து, ”அலமாரியில கொண்டுபோய் பத்திரமா வச்சிடக் கூடாது… ஆழமா தினமும் படிக்கணும்” என்றார்.
கால ஓட்டத்தில் அப்பா உடல்நலம் சரியில்லாமல் ஏழு ஆண்டுகள் சிரமப்பட்டார். தன் பெயரையே மறந்து வாழும் நிலையிலும் அவர் மறக்காமல் இருந்தது திருக்குறளையும் பாரதிதாசனையும்தான். என் மகள் ஒரு குறளின் முதல் வார்தையைத் தொடங்கினால்.. அதை மெல்லிய குரலில் முழுவதுமாக ஒப்பித்து முடிப்பார். இவைதாம் அவர் வாழ்வின் இறுதி அசைவுகள்….
எனக்குப் பாரதி என்று பெயர் வைத்ததோடு இல்லாமல், அவர் எனக்குள் மூட்டிய நெருப்பின் ஒளிதான் எனக்கு நேர்மையாக வாழ்வதற்கான வழியைக் காட்டியது. திரும்பிப் பார்க்கிறேன்… அப்பாவை இழந்து பத்து வருடங்கள்…”
Palani Bharathi முகநூல் பக்கத்திலிருந்து