உண்மையான எங்க வீட்டுப் பிள்ளை உம்மன் சாண்டி
1980களின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் பணியிலிருந்தபோது அப்போது கேரள அரசில் நிதியமைச்சராக இருந்த (பின்னாளில் முதல்வர்) உம்மன் சாண்டியை பத்திரிகைக்காக பேட்டி காண விரும்பினேன். அவரது மனைவி மரியம்மா என்னுடன் வங்கியில் பணியிலிருந்தார். அவர் மூலம் சந்திப்பு எளிதானது. “நாளை காலையில் பிரேக்பாஸ்ட்க்கு வந்துவிடச்சொன்னார்” என்று தகவல் தந்த அவர், “உங்களுக்காக என்ன செய்யட்டும்?” என்றார்.
“அமைச்சர் வழக்கமாக என்ன சாப்பிடுவாரோ அதுவே போதும் (அவர் வெஜிட்டேரியன் என்று தெரியும்)” என்றேன்.
அந்த ஞாயிறு காலை அவர் வீட்டிற்குப் போய் பேசிக்கொண்டிருந்தபோது வந்த காலை உணவு புழுங்கலரிசி கஞ்சி, வேகவைத்த ஒரு நேந்திர வாழைப்பழம். உணவு மட்டுமில்லை, மனிதரே மிக எளிமையானவர். நேர்மையானவர். அரசு காரை அவர் மனைவி, பயன்படுத்தக்கூடாது. உறவினர் யாரும் வேலை கேட்டு வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள்.
“எப்படி உங்களால் ஒரே தொகுதியிலேயே மூன்று முறை ஜெயக்க முடிகிறது” என்று கேட்டபோது “நாளை வாருங்களேன். நான் கிராமத்துக்குப் போகிறேன் என்று அழைத்தார்.
புதுப்பள்ளி என்பது அவர் தொகுதி. கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் கிராமங்கள் அதிகமுள்ள பகுதி. காலை 7 மணியிலிருந்து ஒவ்வொரு வீடாகச் சென்றார். கட்சித் தொண்டர்கள் படையெல்லாம் கிடையாது. உள்ளூர் கட்சிகாரர்கள் 5 பேர் பிளஸ் நான் மட்டுமே.
எல்லா வீடுகளிலும் நேராக நுழைந்து இருப்பவர்களைப் பெயர் சொல்லி விசாரித்தார். வெளியூரிலிருக்கும் மகன், வெளிநாட்டிலிருக்கும் மகள் என்று ஒரு உறவினர் போல விசாரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சில வீட்டில் பெரியவர்கள் இவரை மோனே (மகனே) என்று அழைத்தார்கள். அன்று இரவு 8 மணி வரை பல வீடுகளுக்கு சலிக்காமல் விஜயம், காபி சாப்பாடு, ஓய்வு எல்லாமே அந்தந்த வீட்டு திண்ணைகளில்தான். பலருக்கு என்னை “நம்ம சகா- பத்திரக்காரன்” என்று அறிமுகப்படுத்தினார்.
பல குடும்பத்தினரிடம் அவரைக் குறித்து கேட்டபோது ‘‘மந்திரி நங்களோட மகனாண்ணு” என்று பெருமிதம் பொங்கச் சொன்னார்கள். (பின்னாளில்தான் எம்.ஜி.ஆர். எங்க வீட்டுப் பிள்ளையாகிறார்) நீண்ட நாட்களுக்குப் பின் திருவனந்தபுரத்தில் வீடு கட்டியபோது அழைத்திருந்தார். வீட்டின் பெயர் ‘புதுப் பள்ளி.’
கேரள, ஆந்திர முதல்வர்களைச் சந்தித்து எழுதியிருக்கிறேன். ஆனால் ஒம்மன் சாண்டி சந்திப்பு மறக்க முடியாதது.. அவ்வப்போது தொடர்பிலிருந்த நல்ல நண்பர். பங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது. தொடர்பு கொண்டேன். அவரால் பேச முடியவில்லை என்று அவர் மனைவி மரியம்மா அழுதுகொண்டே சொன்னபோது மிக வருந்தினேன். பதவி, கட்சி, அரசியல் இவைகளையெல்லாவற்றையும் தாண்டி உம்மன் சாண்டி ஒரு நல்ல மனிதர். அந்த நல்ல நண்பரை இழந்ததில் வருத்தம்.
Ramanan Vsv முகநூல் பக்கத்திலிருந்து