“சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள் இன்று”

 “சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள் இன்று”

கணக்கிட முடியாத உயிர்களை களப்பலியாக்கித்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும்சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன். கோவில்பட்டி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ., தொலைவில் கட்டாளங்குளம் கிராமம் உள்ளது. இங்கு அழகுமுத்து கோன் வாழ்ந்த அரண்மனை சிதலமடைந்து உள்ளது. அழகுமுத்து கோனின் வீர வரலாறு ஏட்டிலே புதைந்து காலப் போக்கில் இளைய தலைமுறைக்கு ஏதும் தெரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, அந்த மாவீரன் பற்றி ‘வம்ச மணி தீபிகை’ என்ற பழம்பெரும் வரலாற்று நுால் எடுத்துக் கூறியுள்ளது. இந்த நுாலில் கிடைத்த அரிய செய்திகளை தொகுத்து எட்டையபுரம் எழுத்தாளர் இளசை ராஜாமணி, ‘சுதந்திர வீரன் அழகுமுத்துயாதவ்’ என்ற புத்தகத்தின் வழியாக முதல் முதலில் வெளிக்கொணர்ந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய வரலாற்றில் 1857-ல் தான் முதன்முதலில் விடுதலை போராட்டம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக சுமார் 100 ஆண்டுகள் முன்பே தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் மன்னர் வீரன் அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டுள்ளார் என்று வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுதான் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற முதல் யுத்தம் என்றும் சொல்லப்படுகிறது. தந்தை மன்னர் அழகு முத்துக்கோன் 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகு முத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு விடுதலை வீரர் வீர அழகு முத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்ன அழகு முத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகு முத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகு முத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் கட்டாலங்குளம் சீமையின் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு எட்டயாபுரம் மன்னரான ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் மன்னர் சிறந்த நண்பராக இருந்தார். 1755-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் தளபதிகள் அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் என்று அழைக்கப்பட்ட கான்சாகிப் ஆகியோர் எட்டாயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூல் செய்ய வந்தனர். எட்டாயபுரம் அரசர் இவர்களுக்கு வரி கொடுக்க மறுத்து, ‘வணிகம் செய்ய வந்தவர்கள் வரி கேட்பதா?’ என்று கடிதம் எழுதினார். கடிதத்தைக் கண்ட கான்சாகிப் பீரங்கிப் படையுடன் வந்து எட்டாயபுரத்தைத் தாக்கத் தொடங்கினார். இந்த பதட்டமான சூழலில் எட்டாயபுரத்தை மன்னரையும் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்த வீரன் அழகுமுத்துக்கோன், வெளியே சென்று படைதிரட்டத் தொடங்கினார். தனது படையில் இணைந்தவர்களை, வீரன் அழகுமுத்துக்கோன் பெத்தநாயக்கனூர் கோட்டையில் தங்கவைத்தபோது, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அங்கும் கான்சாகிப்பின் படைகள் தாக்குதலில் ஈடுபட்டன.

எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலைகுலையாத வீரன் அழகுமுத்துக் கோன் கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். ரத்தம் வழிய போரிட்ட அழகுமுத்துக் கோனையும், அவரது 6 தளபதிகளையும் 248 வீரர்களையும் ஆங்கிலப்படை சிறை பிடித்தது. பீரங்கி முன்பு நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.  முதலில் அனைத்து வீரர்களின் வலது கரங்களும் வெட்டப்பட்டன.  பின்னர் வீரன் அழகுமுத்துக் கோனும் 6 தளபதிகளும் ஒரு பீரங்கியின் முன் நிறுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இதில், 7 பேரும் உடல்கள் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு, எட்டயாபுரம் அருகில் உள்ள சோழாபுரம் கண்மாயில் எரியூட்டப்பட்டது. இதுதான் இந்திய மண்ணில் நிகழ்ந்த மிகப் பெரிய முதல் சுதந்திர யுத்தம். இந்தத் தியாகம் நடந்த ஆண்டு கி.பி.1759.

இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த மாவீரனின் பிறந்த நாள் இன்று (ஜூலை 11). அவரது பிறந்த நாளில் வீரன் அழகுமுத்துக்கோனின் வரலாற்றை நினைவு கூர்வோம்..! தமிழக அரசு வீரன் அழகுமுத்துக்கோனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அழகான மணி மண்டபம் கட்டியுள்ளது. கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் 11 ஆம் நாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முன்பு அழகுமுத்துக்கோனுக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளன்று இந்திய அரசின் சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...