செயலிழந்த பான் கார்டை மீண்டும் இயக்குவது எப்படி?

செயலிழந்த பான் கார்டை மீண்டும் இயக்குவது எப்படி?

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காததால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இதை சரி செய்வதற்கான வழிகள்!

நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றான பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் மாதத்துடன் முடிந்துள்ளது.

ஏற்கனவே பலமுறை இதற்கான கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், இம்முறை மேலும் நீட்டிக்கப்படவில்லை.

எனவே, இந்த அவகாசத்திற்குள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில், வருமான வரித்துறை ஏற்கனவே அறிவித்தபடி, பான் கார்டு செயலிழந்திருக்கும்.

செயலிழந்த பான் கார்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது.

வங்கி, டிமெட் கணக்கு உள்ளிட்ட பலவற்றுக்கு பான் கார்டு முக்கியம் என்பதால், கார்டு செயலிழப்பால் முக்கிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் பாதிப்பு உண்டாகலாம்.

நிதி பரிவர்த்தனைகள்.

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காததால், பெரிய தொகையை வங்கியில் செலுத்துவது, கடன் பெறுவது, மியூச்சுவல் முதலீடு போன்றவை சிக்கலாகலாம்.

பான் கார்டு செயலிழப்பால், பல முக்கிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் போகும்.

இத்தகைய நிதி பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை பட்டியலிட்டுள்ளது.

பான் கார்டு செயலிழப்பால், டி.டி.எஸ்., மற்றும் டி.சி.எஸ்., பிடித்தங்கள் அதிக விகிதத்தில் மேற்கொள்ளப்படும்.

வைப்பு நிதி போன்றவற்றிலும் டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படுகிறது.

அதே போல, பான் கார்டு செயலிழந்தால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.

ஆனால், வருமான வரித்துறையிடம் இருந்து பணம் திரும்பப் பெற வேண்டியிருந்தால் அதை கோர முடியாது.

டிமெட் கணக்கை துவக்குவதிலும் சிக்கல் ஏற்படலாம். மேலும், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதும் பாதிக்கப்படலாம். 50,000 ரூபாய்க்கு மேலான தொகைக்கு யூனிட்கள் வாங்க முடியாது.

பங்கு முதலீட்டிலும் இத்தகைய சிக்கலை எதிர்கொள்ளலாம். புதிதாக வங்கி கணக்கு துவக்குவது மற்றும் புதிதாக டெபிட் கார்டு பெறுவதும் சிக்கலாகலாம்.

வங்கியில் பணம் செலுத்தும் போது, 50,000த்திற்கு மேலான தொகைக்கு, பான் கார்டு எண்ணை தெரிவிப்பது அவசியம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். காப்பீடு பாலிசிகள் தொடர்பாகவும் பாதிப்பை எதிர்கொள்ளலாம்.

சொத்து அல்லது வாகன விற்பனைக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

ஆதார் இணைப்பு.

எனினும், செயலிழந்த ஆதார் இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, செயலிழந்த பான் கார்டை மீண்டும் இயக்கி வைக்கலாம்.

வருமான வரித்துறை இணையதளத்தில் இதற்காக விண்ணப்பித்து, 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி, ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வருமான வரித்துறையின்
‘இ- – பைலிங் போர்ட்டல்’ மூலம் பான் கார்டு – ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதே போல, 26 ஏ.எஸ்., படிவம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பிற்கு, வருமான வரி இணையதளத்தில் உள்ள ஆதார் இணைப்பு வசதியை நாட வேண்டும்.

உரிய விபரங்களை சமர்ப்பித்து, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

இணைப்பை உறுதி செய்த பின், 30 நாட்களில் பான் கார்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!