தேவரும் வேட்டைக்காரனும்

சரோஜா தேவியின் தாயாரிடம் வேட்டைக்காரன் படத்துக்காக கால்ஷீட் கேட்டார் தேவர். எப்போதும்போல் மொத்தமாகத் தேதிகளைத் தனக்கு ஒதுக்கி வைத்திருப்பார்கள் என்று எண்ணினார். நம்பிக்கையோடு அடையாறு காந்தி நகருக்குப் புறப்பட்டார். சரோஜா தேவி தேவர் மீது அளவில்லாத மதிப்பு உடையவர். தேவருக்கு ஜனவரி 7 முக்கியம். அன்று அவரது ஆஸ்தான கதாநாயகி சரோவின் பிறந்த நாள்! தேவர் ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தில் சரோஜா தேவிக்குப் பொற்காசுகளால் அபிஷேகம் செய்வார். அத்தனைச் சிறந்த நட்பும் பரஸ்பர மரியாதையும் அவர்களுக்குள் நிலவியது.

வேட்டைக்காரன், அந்த சிநேகத்தில் விரிசல் விழ வைத்து விட்டது. சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மா. கண்டிப்புக்கும், கறாருக்கும் புகழ் பெற்றவர். அவர் சரோஜா தேவியின் வாழ்க்கையை கால்ஷீட்டுகளாகவே கணக்கெடுத்தார். தேவருக்கும் ருத்ராம்மாவுக்கும் நடைபெற்ற காரசாரமான மோதலை சரோஜா தேவி பயந்தபடியே நோக்கினார்.

‘வேட்டைக்காரன் கதை வசனமெல்லாம் ரெடியாயிடுச்சு. ஆரூர்தாசு எழுதிக்கிட்டு வராரு. உங்க தேதி தெரிஞ்சா பூஜையை நடத்திடுவேன்.’

‘முன்ன மாதிரி ஒரேயடியா கொடுக்க முடியாதுங்க. பாப்பாவுக்கு நிறைய படம் புக் ஆகுது. டே அன்ட் நைட் வேல செஞ்சாலும் போதல. நாகி ரெட்டியார் கூடக் கேட்டிருந்தார். எம்.ஜி.ஆர். மேனேஜர் வீரப்பன் படம் ஆரம்பிச்சிருக்காரு.’

‘எம்.ஜி.ஆர். கால்ஷீட்டை மொத்தமாக் கொடுத்திட்டாரு. வர்ற பொங்கலுக்குப் படம் ரிலீஸ். அவர் தேதியை நான் வேஸ்ட்டு செய்ய முடியாதே.’

‘சரவணா பிலிம்ஸ் படம் வேறே கலர்ல முதன்முதலா எடுக்கறாங்க. யார் கலர்ல தயாரிக்கணும்னாலும் எடுத்தவுடன் பாப்பாகிட்ட வந்து கால்ஷீட் கேக்குறாங்க’ – ருத்ரம்மாவின் குரலில் அலட்சியம். தேவர் அதை எதிர்பார்க்கவில்லை.

‘எம்.ஜி.ஆர். கொடுத்த கால்ஷீட்டுல சரோஜா வந்து நடிக்குமா, இல்லையா?’ – தேவர் வழவழா ஆசாமி கிடையாது.

‘இப்படிப் பேசினா எம் பொண்ணு உங்க படத்துல நடிக்காது.’

தேவருக்குக் கொதிப்பு. ‘உங்க மக என் படத்துல நடிக்கறதா வேணாமான்னு நீங்க முடிவு செய்யக்கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான்.’ எரிமலையாக வெடித்தபடியே தன் அங்க வஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு வெளியேறினார். சினிமா காட்சிபோல் சரோஜா தேவி ஓடிவந்து தடுத்தார். அதைச் சட்டை செய்யாமல் கார் கிளம்பியது.

எம்.ஜி.ஆரே வந்து வற்புறுத்தினாலும் இனி சரோ நடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்தார் தேவர். 1963 தீபாவளி அன்று வெளியானது ‘பரிசு’. எம்.ஜி.ஆரும், சாவித்ரியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்து படம் வெற்றிகரமாக ஓடியது. டி. யோகானந்தின் படம் அது. தேவரும் வேட்டைக்காரனில் அதே ஜோடியைப் பயன்படுத்த முடிவு செய்தார். சரோவுக்குப் பதில் சாவித்ரி வந்தார்.

வேட்டைக்காரன் படத்தில் சாவித்ரி நடிப்பதற்காகக் காட்சிகள் வலுவூட்டப்பட்டன. அதை எம்.ஜி.ஆர். வரவேற்றார். சரோஜா தேவிக்கும் கூடுதலாகவே கவர்ச்சியாக எம்.ஜி.ஆருடன் சாவித்ரி ஆடிப்பாடினார். ‘மெதுவா மெதுவா தொடலாமா – உன் மேனியிலே என் கை படலாமா…’

தேவருக்கு அதிலும் திருப்தி இல்லை. அப்போதுதான் திரையுலகில் தடம் பதிக்க ஆரம்பித்திருந்த நாகேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனோரமாவுடன் ஒரு காமெடி பாடல் வைத்தார். ஒரே நாளில் ஊட்டியில் முழுப் பாடலையும் எடுத்து முடித்தார். மனோரமாவுக்கு முதன் முதலில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தந்து அதிரச் செய்தார். சீட்டுக்கட்டு ராஜா என்ற பாடல் பட்டி தொட்டி முதற்கொண்டு எங்கும் பிரபலம்.

எம்.ஜி.ஆரின் புதிய கெட்-அப் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. சென்னை சித்ரா தியேட்டர் அல்லோலகல்லோலப்பட்டது. திரையிலும் தியேட்டருக்குள்ளேயும் எல்லாம் தொப்பிகளாகவே தெரிந்தன.

தேவர் எம்.ஜி.ஆருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர். பிரமாண்டமான செட்களில் அவரது படங்களில் ‘கனவு’ பாடல் காட்சிகள் வரவே வராது. ‘செட்டை எவன்டா பாக்குறான், அண்ணனத்தான்டா ரசிக்க வரான்’ என்பார்.

வேட்டைக்காரனுக்காக சித்ரா தியேட்டர் வாசலில் ரசிகர்களே காடும் மலையும் சூழ்ந்த அரங்கம் அமைத்தார்கள். அதில் வேட்டைக்காரன் தோற்றத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிலை. ஏறக்குறைய ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவானது. தீ அணைப்பு எஞ்சின்களுக்கு மட்டும் ஏழாயிரம் கொடுத்தார்கள்.

வாள் வீச மட்டுமே எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அவர் பேன்ட் ஷர்ட் அணிந்து நடித்தால் படம் ஓடாது என்கிறக் கருத்து கோடம்பாக்கத்தில் நிலைபெற்றிருந்தது. தேவர் அதை மாற்றிக் காட்டினார். சமூகப் படங்களிலும் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.

(பா. தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்திலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!