ரயில்ஹாரன்

 ரயில்ஹாரன்

இந்தியாவில் மிகப்பெரிய பயணிகள் போக்குவரத்தாக ரயில்வே விளங்கி வருது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். நாமும் பல முறை ரயில்களில் பயணம் செய்திருப்போம். ஆனால், ரயில் புறப்படும் போதும், பயணத்திலும் ஹாரன் ஒலிப்பதை கேட்டிருப்போம். இது, ரயில் பாதையில் நடமாடும் மனிதர், விலங்கு மற்றும் பணியாளர்களை எச்சரிப்பதற்காக என எண்ணுகிறோம்.

உண்மையில் ஹாரன் ஒலி இதற்காக மட்டுமே எழுப்பப்படுவதில்லை. ரயில் ஓட்டுநர்கள், தகவல் பரிமாற்றத்துக்கும் ஹாரனை பயன்படுத்து கின்றனர். இதற்காக 11 விதமாக ஹாரன் ஒலியை எழுப்பும் முறையை கற்றுள்ளனர். ஹாரன் சத்தம் சில வேளைகளில் நீண்டதாக இருக்கும். சில நேரங்களில் குறுகியதாக இருக்கும். இப்படி ரயில்களின் ஓட்டுநர்கள் எழுப்பும் ஹாரன் ஒலிக்குப் பின்னால் பல விதமான தகவல்கள் உள்ளன. அவை என்னெவன்று தெரிந்து கொள்ளுங்களேன்.(கட்டிங் கண்ணையா)

🎼ஒருமுறை சிறிய ஹாரன் எழுப்பிய படி ரயில் நகர்ந்தால், ரயிலை பணிமனைக்கு எடுத்து செல்வதாகவோ, பழுது நீக்கிய பின் திரும்ப வருவதாகவோ அர்த்தம்.

🎼இரண்டு முறை சிறிய ஹாரன் ஒலித்தால், ரயிலின் பின்புறம் உள்ள கார்டு ஊழியருக்கு, ரயில் புறப்படுவதை தெரிவிப்பதாக இருக்கும். ரயில் ஒரு நிலையத்தில் இருந்து புறப்படும் போது இதுபோன்ற ஒலியை கேட்கலாம்.

🎼மூன்று முறை சிறிய ஹாரன் ஒலிப்பது மிக அரிதாகவே பயன்படுத்தப்படும். மூன்று முறை குறுகிய சத்தத்தை எழுப்பினால் ரயில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்று பொருள். ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் ரயில் இல்லை என பின்புறம் இருக்கும் கார்டுக்கு சிக்னல் கொடுப்பதாக இந்த ஒலி அமையும். இந்த சிக்னல் கிடைத்ததும் உடனடியாக தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்துவார் கார்டு.

🎼நான்கு முறை குறுகிய ஹாரன் சத்தம் கேட்டால் ரயிலில் தொழில்நுட்ப கோளாறு அல்லது ஓடும் பாதையில் சிக்கல் என்று பொருள். பயணத்தை தொடர முடியாத சூழலில் பின்புறத்தில் இருக்கும் கார்டுக்கு இந்த வகையில் தகவல் தெரிவிக்கப்படும்.

🎼ஒரு நீண்ட மற்றும் குறுகிய ஹாரன் சத்தம் கேட்டால் ஓட்டுநர் ரயில்வே கார்டிடம் பிரேக்கை சரி செய்யச் சொல்கிறார் என்று அர்த்தம்.

🎼அடுத்த ஹாரன் வகை தொடர் ஹாரன்ரயில் ஒரு நிலையத்தில் நிற்காமல் வேகமாக கடக்கும் போது, தொடர் ஹாரன் ஒலிக்கப்படும். நீங்கள் ரயிலில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது தொடர்ந்து ஹாரன் சத்தம் கேட்டால் நீங்கள் ஏதோ ரயில் நிலையத்தை வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.

🎼நீண்ட ஹாரனை அடுத்து ஒரு சிறிய ஹாரன் என அடுத்தடுத்து ஒலிக்கப்படும். இது பெரும்பாலும் ரயில் புறப்படும் இடத்தில் ஒலிக்கப்படும். ரயில் ஒரு இடத்தில் நிறுத்தப்படும் போது, இன்ஜின் டிரைவர் மற்றும் கார்டு இருவருமே பிரேக் போட்டிருப்பார். ரயில் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் முன், கார்டை அலார்ட் செய்து அந்த பிரேக்கை ரிலீஸ் செய்ய இந்த ஹாரன் சத்தம் உதவுகிறது.

🎼இரு நீண்ட மற்றும் இரு குறுகிய ஹாரன் சத்தமானது ரயில் ட்ராக் மாறப்போகிறது என்று அர்த்தம். பெரும்பாலும் நிலையங்களில் ரயில் நுழையும் போது இந்த வகை ஹாரன் ஒலிக்கும்.

🎼இடைவேளியில் இரண்டு ஹாரன் சத்தம் ஒலித்தால், ரயில் கிராசிங்கை கடக்கப் போகிறது என அர்த்தம். இது ரயில்வே கிராசிங்கில் கடக்க காத்திருக்கும் மக்களை எச்சரிப்பதாகும்.

🎼இரு குறுகிய மற்றும் ஒரு நீண்ட ஹாரன் சத்தம் எழுப்பப்பட்டால் யாரோ பிரேக் சங்கிலியை இழுத்து நிறுத்திவிட்டார்கள் என்பதை இன்ஜின் டிரைவருக்கு அறிவிக்கிறார் என்று பொருள்.

🎼இரண்டு நீண்ட ஹாரன், தொடர்ந்து இரு சிறிய ஹாரன் அடுத்தடுத்து ஒலித்தால் அது ரயில் அபாய கட்டத்தில் இருப்பதாக அர்த்தம். ரயில் இன்ஜினில் பிரச்னை காரணமாக கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்த வகை ஹாரன் பயன்படுத்தப்படும்.

🎼6 முறை குறுகிய ஹாரன் சத்தம் எழுப்பப்பட்டால் ரயில் அபாயக் கட்டத்தில் இருக்கிறது என்பதை தெரிவிக்கும். இது மிக அரிதாகத் தான் கேட்க முடியும்.

🎼இது போன்ற சிக்னல் முறை ரயில் ஓடத் துவங்கிய காலத்தில் வகுக்கப்பட்டன. ஆனால், இன்று அப்படி அல்ல, வயர்லெஸ், செல்போன் தொடர்பு முறைகள் வந்துவிட்டன. தகவல்களை நொடிப்பொழுதில் பரிமாறிக்கொள்ள முடிகிறது.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...