ஐசிஎஃப்-ஐயே தோற்கடிச்சிரும்போல… இந்தியாவின் மிக பெரிய தனியார் ரயில்பெட்டி தொழிற்சாலை திறப்பு!
இந்தியாவின் மிகப் பெரிய ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையாக ஐசிஎஃப் இருக்கின்றது. இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு இங்கிருந்தே ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், இதற்கே டஃப் கொடுக்கும் வகையில் ஓர் ரயில் பெட்டி உற்பத்தி ஆலை இந்தியாவில் தற்போது திறக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுவும் ஓர் தனியார் நிறுவனம் திறந்திருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொண்டக்கல் கிராமத்திலேயே இந்தியாவின் மிகப் பெரிய ரயில் பெட்டி உற்பத்தி ஆலை திறக்கப்பட்டு இருக்கின்றது. இதனை அம்மாநிலத்தின் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் திறந்து வைத்திருக்கின்றார்.
இந்த ரயில் பெட்டி தொழிற்சாலை மேதா சர்வோ டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. தெலங்கானாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே இந்த மேதா சர்வோ டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும். உள்மாநில நிறுவனம் இந்த அளவு மிகப் பெரிய ரயில் பெட்டி உற்பத்தி ஆலையை திறந்திருப்பது மாநிலத்திற்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதாக முலமைச்சர் சந்திரசேகர் ராவ் கருத்து தெரிவித்தார்.
இந்த ஆலை சிக்கலான எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் ரெயில்வோ பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே மும்பை மோனோ ரயிலை தயாரிப்பதற்கான ஆர்டர் இந்த நிறுவனத்திற்குக் கிடைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆர்டர் நிறுவனத்திற்கு மட்டுமல்ல முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்க்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆந்திராவிடம் இருந்து பிரிந்து தெலங்கானா என்கிற மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் மாநிலத்தில் மிகப் பெரிய ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டே மக்களிடம் தனி மாநில கோரிக்கை வாக்குகளை தற்போதைய தெலங்கானா அரசு சேகரித்து வந்தது.
ஆனால், பல்வேறு காரணங்களால் தெலங்கானா அரசு முன்னெடுத்து வந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியைச் சந்தித்தன. இந்த நிலையிலேயே கடந்த 2017ம் ஆண்டு மேதா குழுமம் தெலங்கானா மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு நிறுவனத்துடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டது. இந்த ஒப்பந்தமே தற்போது நாட்டிலேயே மிகப் பெரிய தனியார் ரயில் பெட்டி தொழிற்சாலை அம்மாநிலத்தில் அமைய காரணமாக அமைந்திருக்கின்றது. 13 ஆகஸ்டு 2020 இன்று இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டநிலையில் தற்போது முழுமையாக இயங்கும் நிலையை அந்த ஆலை அடைந்திருக்கின்றது. ரயில் பெட்டி தொழிற்சாலை உற்பத்தி ஆலை அமைவதற்கான அடிக்கல்லை தெலங்கானா மாநிலத்தின் கேடி ராமராவே நாட்டினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு ஆண்டிற்கு 500 ரயில் பெட்டிகள் மற்றும் 50 லோகோமோட்டிவ் எஞ்ஜின்கள் தயாரிக்க முடியும். 100 ஏக்கர் பரப்பளவில் ரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ரயில் பெட்டி, டிரெயின் செட்டுகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் மோனோ ரயில்கள் என பலதரப்பட்ட ரயில்வே சார்ந்தவற்றை இங்கு வைத்து தயாரிக்க முடியும்.
ஆகையால், இந்தியாவின் மிகப் பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் ஒன்றான சென்னை ஐசிஎஃப்-க்கே இது கட்டாயம் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தொழிற்சாலையால் தற்போது 558 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகி இருக்கின்றது. இத்துடன், கூடுதலாக விரைவில் 500க்கும் அதிகமான பணியாளர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.
ஆகையால், எதிர்காலத்தில் நிறுவனத்தின்கீழ் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த ஆலையில் இருந்து இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ரயில் பெட்டி தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ஏற்கனவே ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, பிரேசில் மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகளில் நிறுவனம் துணை நிறுவனங்களை வைத்து இயக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேதா நிறுவனம் ஏற்கனவே இந்தியன் ரயில்வேஸுக்கான போகிக்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ரயில் பெட்டி உற்பத்தியிலும் அது களமிறங்கி இருக்கின்றது. இந்த பணியிலும் இந்த நிறுவனம் மிக சிறப்பாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விளைவாக உலக அளவில் இந்தியாவை ரயில் பெட்டி உற்பத்தியில் முக்கிய அந்தஸ்தை பெற செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.