பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் வாயில் திறப்பு

 பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் வாயில் திறப்பு

தமிழக அரசின் கல்வி அமைச்சராகப் பத்தாண்டுகள் பொறுப்பு வகித்தவரும் தி.மு.க.வின் பொருளாளராகவும் இருந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நூற்றாண்டு நினைவு வாயில் திறப்பு விழா இன்று (19-12-2022) காலை நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே பேசும்போது “பள்ளிக் கல்வி வளாகம் பேராசிரியர் அன்பழகனார் வளாகம் என பெயர் சூட்டி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ், துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் திமுக முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் உள்ள அன்பழனின் திருவுருவப் படத்திற்கு முதல்வரும் திமுக அமைச்சர்கள் மற்று நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள். இதை அடுத்து சட்டசபையில் அறிவித்தபடி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் பேராசிரியர் கல்வி வளாகம் என பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டது

பேராசிரியர் அன்பழகனின் அரும்பணி

கடந்த 1977-ம் ஆண்டு திமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற அவர், தனது வாழ்நாளின் இறுதி நொடி வரை 43 ஆண்டுகள் அந்தப் பதவியை அலங்கரித்தார்.

இரண்டு முறை கல்வி அமைச்சராகவும் ஒரு முறை நிதி அமைச்சராகவும் ஒரு முறை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும் ஒன்பது முறை தமிழக சட்டமன்ற அமைச்சராக இருந்துள்ளார். சிறந்த பேச்சாளரான இவர்  நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட அன்பழகன் நூற்றாண்டு நிறைவையொட்டி பள்ளிக்கல்வித் துறை வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் அங்கு சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

பிறப்பும் சிறப்பும்

திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த க.அன்பழகனுக்குப் பெற்றோர் சூட்டிய ராமையா. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் படித்த அவர் பெரியாரின் கொள்கையை ஏற்று செயலாற்றத் தொடங்கினார். தனக்கு இருந்த தனித்தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கல்லூரி பயின்ற காலத்தில் ராமையா என்ற பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.

அண்ணாவின் தம்பி
இளங்கலை முடித்த கையோடு தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். இதையடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய அவர், அவ்வப்போது அண்ணாவைச் சந்திக்க வந்து செல்வார். அவ்வாறு அன்பழகன் வரும்போதெல்லாம். ”அடடா வாப்பா பேராசிரியர் தம்பி” என அண்ணா வாஞ்சையோடு அழைத்தது மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றி இருபோரிடமும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அன்று அண்ணா சூட்டிய பேராசிரியர் பட்டம் பின்னாளில் அவருக்குத் தனிப்பெரும் அடையாளமாக மாறி ”இனமான பேராசியர் அன்பழகன்” என அழைக்கப்பட்டு வந்தார்.

கலைஞருடன் நட்பு
மறைந்த கலைஞர் கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் ஏறத்தாழ 75 ஆண்டுகால நட்பு இருந்தது. இத்தனை ஆண்டுகளில் அவர்கள் இருவருக்கும் இடையே எத்தனையோ முறை கருத்து வேறுபாடுகள், மன வருத்தங்கள் ஏற்பட்டபோதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை.

சர்ச்சைக் கருத்து

பள்ளிக் கல்வித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் நுழைவு வாயில் எனப் பெயர் சூட்டப்படும் என சிலை வடிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவித்த கையோடு பல எதிர்ப்புகள் கிளம்பியது. கல்வித்துறைக்கு அன்பழகன் மட்டும்தான் பணி செய்தாரா? காமராஜர் தான் கல்வித்துறைக்கு சிறந்த பணியாற்றியவர் என்று பல குரல்கள் எழுந்தன. இருந்தபோதிலும் சிலை திறப்பது தள்ளிவைக்கப்பட்டு இன்று வாளகத்தின் பெயர் சூட்டப்பட்டது.

அதேபோல் பள்ளிக் கல்வித்துறை முதல் தளம் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் பெரிய அளவு வண்ணத்  திருவுருவப் படங்கள்  திறந்துவைக்கப்பட்டன. அதற்கு கண்டனக் குரல்கள் எழுந்தன.
அதையெல்லாம் மீறி தற்போது வெற்றிகரமாக பள்ளிக் கல்வித்துறை வளாகத்துக்கு ‘பேராசிரியர் அன்பழகன் வளாகம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...