ஒத்த சிந்தனை | திருமாளம் எஸ்.பழனிவேல்
“ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா” என்று இல்லாத ஒரு விஷயம் குறித்து காதலர்களால்தான் கற்பனை செய்ய முடியும். அவர்கள் காதலுக்குள் புகுவதற்கு முதற்கண் 60 சதவீத சமமான சிந்தனை இருக்க வேண்டும். சிலர் பாஸ்மார்க் 40 சதவீத மார்க் பெற்றால் போதுமென்று நினைத்து காதலில் இணைந்து பின்னர் வாழ்கையில் தோல்வியடைகின்றனர். 75 சதவீத ஒத்த சிந்தனை உள்ளவர்களே இணைபிரியா தம்பதிகளாக வாழ்கின்றனர்.
அது என்ன ஒத்த சிந்தனை. பேருந்தில் நாம் பயணிக்கும் போது நம் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பார். மதுரைக்கு தஞ்சாவூரில் இருந்து திருச்சி வழியாக செல்வோம் என்று முடிவெடுத்திருப்போம். அருகில் உள்ளவரும் அதே போல நினைத்திருந்தால் அதுதான் ஒத்த சிந்தனை. நம் கருத்தை அவர் மீது திணிக்கவில்லை. அவரும் அது போலவே.
ஒரே பொருள் படும் வகையில் இருவர் வெவ்வேறு பத்திரிக்கைகளில் கவிதை எழுதி அது பிரசுரமாகி இருக்கலாம். அதில் எந்த தவறும் கிடையது. அப்பட்டமாக காப்பியடித்து எழுதுவது வேறு ஒரு வகை. அதில் கைதேர்ந்த நிபுணர்கள் சிலர் இருக்கிறார்கள். கொஞ்சம்கூட கூச்சப்படாமல் அப்படியே செராக்ஸ் எடுத்து அனுப்பிவிடுவார்கள்.
நாலு சுவர்களுக்குள்ளேதான் நாம் வாழ்கிறோம். ஐந்தாவது ஒரு சுவர் என்பது கிடையாது. அந்த இடத்துக்குள் பீரோ, டிவி, காஸ் சிலிண்டர், மற்றும் பல பொருட்கள் எல்லோருடைய வீட்டிலும் பொதுவாக இருக்கும். நான் ‘காஸ்’ சிலிண்டர் பற்றி எழுதுகிறேன் நீ ஏன் அதைப்பற்றி எழுதுகிறாய் என்று யாரிடமும் கேட்க முடியாது. அவரவர் கற்பனை அவரவர் உள்வாங்கிய கருத்துக்களுக்கு ஏற்றவாறு இருக்கும். விஷயம் ஒன்றுதான். குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி பலர் பல வடிவங்களில் எழுதுவதே ஒத்த சிந்தனை.
“பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா என்று சுந்தரரும் “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்” என்று நாவுக்கரசர் தேவாரத்தில் பாடியதும் ஒத்த சிந்தனையோடு சிவனைப்பற்றியே. பாட்டுடைத்தலைவன் ஈசனே. அவரைப்பற்றி பாடிய பாடல்கள் வேறு வேறு வடிவத்தில் வந்து நம்மை பக்தியில் திளைக்க வைத்தன.
எஸ்.பி. சவுத்திரியை மனதில் வைத்துக்கொண்டு போலீஸ் படங்களில் நடிக்கலாம். நானும் அவரைப் போல நடிப்பேன் என்று முயன்றால் பித்தளை பதக்கம் கூட கிடைக்காது. காபி உடலுக்கு ஆகாது.
ஒத்த சிந்தனைக்கு சிறந்த உதாரணம் தண்டவாளங்கள். அவை இரண்டும் ஒரே நேர்கோட்டில் செல்லும் போது சுகமான விபத்தில்லா பயணங்கள் தொடர்கின்றன.
நல்ல விஷயங்களில் ஒத்த சிந்தனை வந்தால் எந்த வைரஸ்களும் நம்மை தாக்காது. ‘நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு’ தலைவர் பாடலை ஒலிக்கவிட்டு மனதில் ஒளிக்கவிட்டு ஒத்த சிந்தனையோடு இருப்போம்…
– திருமாளம் எஸ்.பழனிவேல்
1 Comment
அருமை, வாழ்த்துக்கள்