நெருங்கும் தீபாவளி: மளிகை பொருட்கள் விலை உயர்வு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பலகாரங்கள் செய்ய பயன்படும் பொருட்களின் விலையும் இப்போது இருந்தே உயர தொடங்கியுள்ளது.
இதில் சமையல் எண்ணெய் மட்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. பாமாயில் (1 லிட்டர்) ரூ.120லிருந்து ரூ.128, சன்பிளவர் ஆயில் ரூ.132லிருந்து ரூ.140 ஆக விலை அதிகரித்துள்ளது. கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மட்டும் அதே விலையில் இருந்து வருகிறது.
துவரம் பருப்பு (1 கிலோ) ரூ.92லிருந்து ரூ.105, உளுந்தம் பருப்பு ரூ.98லிருந்து ரூ.120, கடலைப்பருப்பு ரூ.65லிருந்து ரூ.70, பாசிப்பருப்பு ரூ.98லிருந்து ரூ.108 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
மேலும் சமையலில் முக்கிய பங்கு வகித்து வரும் கடுகு விலை 90லிருந்து ரூ.95, சீரகம் ரூ.160லிருந்து ரூ.170, மிளகு ரூ.450லிருந்து ரூ.465 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இன்னும் சில பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு என்பது மொத்த மார்க்கெட்டில் தான். சில்லறை மார்க்கெட், சூப்பர் மார்க்கெட்டில் கிலோவுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மளிகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அதே நேரத்தில் தற்போது சமையல் எண்ணெய், பருப்பு போன்றவற்றின் விலை உயர்வு அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு மளிகை வியாபாரி ஒருவர் கூறியதாவது: தீபாவளி சமயத்தில் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
சொல்லப்போனால் காரணமே இல்லாமல் தான் உயர்ந்துள்ளது.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் இன்னும் அதிகரிக்க தான் வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகைக்காக இப்போதே நிறைய பேர் பொருட்கள் வாங்க குறிப்பிட்ட பணத்தை செலுத்தி ஆர்டர் செய்துள்ளனர்.
நாங்கள் இப்போது இருக்கும் விலையில் அவர்களிடம் பணத்தை பெற்றுள்ளோம். இன்னும் விலை உயர்ந்தால் அவர்களிடம் கூடுதல் பணத்தை வாங்குவது என்பது முடியாத காரியம். இதனால், வியாபாரிகளுக்கு தான் இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
எண்ணெய், பருப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ளதால் ஸ்வீட் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெரியவரும்.