வரலாற்றில் இன்று – 11.06.2021 ராம் பிரசாத் பிஸ்மில்
விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த ராம் பிரசாத் பிஸ்மில் (Ram Prasad Bismil) 1897ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பிறந்தார்.
இவர் சந்திரசேகர ஆசாத், பகவதி சரண், ராஜகுரு ஆகிய புரட்சி வீரர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ‘மாத்ரிவேதி’ (Matrivedi) என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினார்.
மேலும், இவர் சுவாமி தயானந்த சரசுவதியால் எழுதப்பட்ட சத்யார்த் பிரகாஷ் என்ற புத்தகத்தால் கவரப்பட்டு ஆர்ய சமாஜ் (Arya Samaj) இயக்கத்தில் இணைந்தார்.
தனது சகாக்களுடன் இணைந்து காகோரி (Kakori) சதித் திட்டத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
1925ஆம் ஆண்டு காகோரி என்ற இடத்தில் ரயிலில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷாரின் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றதால் கைது செய்யப்பட்டு, 1927 டிசம்பர் 19ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இன்று இவரின் நினைவு தினம்
இருபதாம் நூற்றாண்டு அறிஞரும், தமிழ் தேசியத்தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரன் என்பது இவருடைய புனைப்பெயர் ஆகும்.
இவர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே, தாம் இயற்றிய இரு காவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரை சந்திக்க சென்றார். ஆனால் பாவேந்தரை சந்திக்க முடியவில்லை. பிறகு ஒரு நூலை கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே தன் அச்சகத்தில் அச்சிட்டு தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார்.
மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாக தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 1995ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1968ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உலக தமிழ் கழகம் தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது.