வரலாற்றில் இன்று – 10.03.2021 பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இருபதாம் நூற்றாண்டு அறிஞரும், தமிழ் தேசியத்தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரன் என்பது இவருடைய புனைப்பெயர் ஆகும்.
இவர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே, தாம் இயற்றிய இரு காவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரை சந்திக்க சென்றார். ஆனால் பாவேந்தரை சந்திக்க முடியவில்லை.
பிறகு ஒரு நூலை கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே தன் அச்சகத்தில் அச்சிட்டு தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார்.
மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாக தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 1995ஆம் ஆண்டு மறைந்தார்.
மார்செல்லோ மால்பிகி
உயிரினங்களின் உடற்கூறு கட்டமைப்புகளை மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ச்சி செய்வதற்கு அடித்தளமிட்ட மார்செல்லோ மால்பிகி (ஆயசஉநடடழ ஆயடிiபாi) 1628ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இத்தாலியின் தலைநகர் பொலோக்னா என்ற ஊரில் பிறந்தார்.
பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே மருத்துவமும் மற்றும் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வந்தார். சுவை அரும்புகள், மூளையின் அமைப்பு, பார்வை நரம்பு, கொழுப்பு தங்கும் இடங்கள், ரத்தத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், உடற்கூறியல், உடல் இயங்கியல் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளார்.
மைக்ரோஸ்கோப் மூலம் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களின் உடற்கூறு கட்டமைப்புகளையும் ஆராய்ந்தார். இவர் கருவியல், தாவர உடற்கூறியல், திசு அமைப்பியல், ஒப்பீட்டு உடற்கூறியலின் முன்னோடி எனப் போற்றப்பட்டார்.
நுரையீரல் செல்களை சோதனை செய்து பார்த்து அங்கு சிறிய மெல்லிய சுவர் கொண்ட ரத்த நுண் குழாய்கள் இருப்பதை கண்டறிந்தார். மேலும் இவைதான் தமனிகளையும், சிரைகளையும் இணைக்கின்றன என்பதையும் ஆராய்ந்து கூறினார்.
அதன்பிறகு கண்டறியப்பட்ட பல உடல் உள்ளுறுப்புகள் மால்பிஜியன் துகள்கள், மால்பிஜியன் அடுக்கு, மால்பிஜியன் குழல்கள் என இவரது பெயரால் அடையாளம் காணப்பட்டன.
அறிவியல் வரலாற்றில் முக்கியமான கண்டுபிடிப்புகளை கண்டறிந்த மார்செல்லோ மால்பிகி 1694ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1876ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
1897ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சமூக சீர்திருத்தவாதியும், கவிஞருமான சாவித்திரிபாய் புலே மறைந்தார்.
1977ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி யுரேனஸ் கோளை சுற்றியுள்ள வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.