பறவைக் காய்ச்சல்: கோழி, வாத்து கறி சாப்பிடலாமா?
கேரளா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எச்5 என்1 எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளை தாக்கும். பறவைக் காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான பறவைகள் இறந்துள்ளன. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் நிலைமைகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சலால் கோழி, வாத்துகள் விற்பனை சரிந்துள்ளது. அவற்றை சாப்பிட மக்கள் தயங்கி வருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப் பில் கூறியிருப்பதாவது:
கோழிக்குஞ்சு, கோழி, வாத்து போன்றவற்றை சாப்பிடும் முன்புஅவற்றை தூய்மையான முறையில் முறையாக தயாரித்து நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.
வெப்பத்தால் இந்த வைரஸ் அழியும் என்பதால், உணவை குறைந்தது 70 டிகிரி செல்சியஸில் வேக வைப்பதன் மூலம் உணவில் உள்ள கிருமி அழியும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவை அல்லது இறந்த பறவைகளை கவனமாக கையாள வேண்டும். பறவைக் காய்ச்சலை தடுக்க இவற்றை பின்பற்றுவது முக்கியமானது.
முட்டை, சிக்கன் சாப்பிடலாமா?
பறவைக் காய்ச்சல் பரவும் சமயத்தில் முட்டை, சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பது குறித்து நிபுணர்கள் அளித்த விளக்கங்கள் வருமாறு:
- முட்டை, சிக்கன் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் என்பதற்கு சொற்ப அளவிலான ஆதாரங்களே உள்ளன.
- வைரஸ் பாதிக்கப்பட்ட கோழியாகவே இருந்தாலும் கூட நன்கு சமைத்தால் அதிலுள்ள வைரஸ்கள் இறந்து போகும்.
- சிக்கன், கோழியை நன்கு சூடுபடுத்தும் போது அதன் மீதுள்ள வைரஸ்கள் இறந்துவிடும். அவைகளுக்கு உள்ளே இருக்கும் வைரஸ்கள் கூட இறந்து விடும்.
- எனவே, 70 டிகிரி செல்சியல் சூட்டில் இறைச்சியின் அனைத்து பாகங்களையும் சமைத்து சாப்பிட வேண்டும்.
- முட்டையை ஆப்பாயில், ஒன்சைடு ஆம்லெட் என அரைவேக்காட்டில் சாப்பிடாமல், நன்கு வேக வைத்து சாப்பிடுவது நன்று.
- முட்டையை வேக வைத்த பிறகு மஞ்சள் கரு திடமாக இருக்க வேண்டும். அது தண்ணீர் போல் உடைந்து ஒழுகினால் அந்த முட்டையை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- பறவைகளின் மலம் மற்றும் பிற நீர்த்துளிகள் மூலமாகவே பரவும்.
- இது மனிதர்களுக்கு தொற்றும் வாய்ப்புண்டு. ஆனால், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது.
- பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் காய்ச்சல், இருமல், சளி, நெஞ்சு வலி, தொண்டை வறண்டு போதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இவ்வாறு உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.