வரலாற்றில் இன்று – 09.01.2021 வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றனர். அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜனவரி 9, 1915ஆம் ஆண்டு (மும்பை) இந்தியா திரும்பினார். காந்தி தாயகம் திரும்பிய நாளை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஹர் கோவிந்த் குரானா
மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான குரானா 1922ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் ராய்ப்பூர் கிராமத்தில் பிறந்தார்.
இவர் 1959ஆம் ஆண்டு மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார். இது தொடர்பான ஆய்வு மூலம் மரபுவழியிலான சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வுக்காக 1968ஆம் ஆண்டு இவருக்கும் நிரென்பர்க், ஹாலி ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. மேலும் மரபுக்குறியீடு (Genetic code), எஸ்கிரிஷியா கோலி (Escherichia coli) என்னும் நுண்ணுயிரிகளின் மரபணு உருவாக்கம் போன்ற ஆய்வுகளில் இவருடைய குழுவினரும் ஈடுபட்டனர்.
அதன்பின் இந்த நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை இவர்கள் செயற்கையாக உருவாக்கினர். புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதிலும் இவர் மகத்தான பங்காற்றியுள்ளார்.
முதன்முறையாக செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்த அறிவியல் மேதை ஹர் கோவிந்த் குரானா 2011ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1917ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் டி.ஆர்.இராமச்சந்திரன் கரூர் மாவட்டத்தில் பிறந்தார்.
1921ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.