வரலாற்றில் இன்று – 08.01.2021 ஸ்டீபன் ஹாக்கிங்
கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தார்.
இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள் அண்டவியலும் (Cosmology), குவாண்டம் ஈர்ப்பும் (Quantum Gravity) ஆகும். 21 வயதில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர், கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் உரையாடினார்.
1986ஆம் ஆண்டு அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்தது. இவர் காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இவர் 2018ஆம் ஆண்டு மறைந்தார்.
ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ்
உயிரினங்களின் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவருமான ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் 1823ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் அஸ்க் (Usk) நதி அருகில் உள்ள கென்சிங்டன் காட்டேஜ் என்ற இடத்தில் பிறந்தார்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். பின்பு சுயமாக கற்று பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார். 1844ஆம் ஆண்டு லீசெஸ்டர் பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்தது. அங்கு ஹென்றி வால்டர் பேட்ஸ் என்பவரை சந்தித்தார். இருவருமே முறையான பள்ளிப் படிப்பை பெறாதவர்கள், சுயமாக கற்றவர்கள், வண்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
வாலஸ் தனியாக பயணம் மேற்கொண்டு, போகும் இடங்களில் எல்லாம் ஏராளமான தாவரங்கள், விலங்கினங்களின் மாதிரிகளை சேகரித்தார். 1852ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு திரும்பி வரும் வழியில் தீ விபத்து ஏற்பட்டதால், சேகரித்து வைத்திருந்த மாதிரிகளும் கப்பலோடு போய்விட்டது.
நாடு திரும்பியவர் 2 ஆண்டுகள் தனது அனுபவங்கள் குறித்து கட்டுரைகள் எழுதுவதில் செலவிட்டார். எட்டு வருடங்கள் தொடர்ந்து பறவைகள், பாம்புகள், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள், பட்டாம்பூச்சிகள், வண்டுகள் என 1,25,000-க்கும் அதிகமான மாதிரிகளை சேகரித்தார்.
உயிரி புவியியலின் தந்தையாக போற்றப்படும் ஆல்ஃப்ரெட் வாலஸ் 1913ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1324ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இத்தாலிய வணிகர் மார்க்கோ போலோ மறைந்தார்.
1642ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலி மறைந்தார்.
1941ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் பேடன் பவல் மறைந்தார்.