சரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ்

 சரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ்

கனவுகள் அனைவருக்குமானவை. எனினும் அவற்றை உணர்ந்து கடினமாக உழைத்து, பல தியாகங்களைச் செய்பவர்களே வெற்றி வாகை சூடுகின்றனர். வரலாற்றில் அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி இந்த வார சண்டே சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

உலகளவில் சொகுசு கார் உற்பத்தியில் அழகிய கார்களை வடிவமைத்து விநியோகித்து வரும் முன்னணி நிறுவனம் மெர்சிடஸ் பென்ஸ். இந்நிறுவனத்தை நிறுவியவர் கார்ல் பிரடரிக் பென்ஸ். கார்ல் பென்ஸ் 1844ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று ஜெர்மனியில் முல்பர்க்கில் பிறந்தார்.

1855ஆம் ஆண்டில் இவர் உருவாக்கிய பென்ஸ் மோட்டார்வேகன் (Benz Patent Motorwagen) உலகின் முதல் நடைமுறை வாகனமாகக் கருதப்படுகிறது. இந்த வாகனத்துக்கான காப்புரிமையை 1886ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதியன்று கார்ல் பென்ஸ் பெற்றுக்கொண்டார்.

வறுமையில் வாழ்ந்து வந்தாலும் கார்ல் பென்ஸ் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதற்கு அவரது தாய் கடுமையாக உழைத்தார். பள்ளிப் படிப்புக் காலத்தில் கார்ல் பென்ஸ் வியக்கத்தக்க மாணவராகத் திகழ்ந்தார். பின்னர் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் படித்தார். பூட்டு செய்தல் தொடர்பான தொழில்நுட்பத்தில் தனது கவனத்தைச் செலுத்தினார் கார்ல் பென்ஸ்.

பிறகு ரயில் எஞ்சின் தொழில்நுட்பம் குறித்து கல்வி கற்றார். தனது 15ஆவது வயதில் 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியன்று கால்ஸ்ரூ பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் (mechanical engineering) படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கால்ஸ்ரூ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார். 1864ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதியன்று கார்ல் பென்ஸ் தனது 19ஆவது வயதில் பட்டம் பெற்றார்.

பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த காலங்களில் கார்ல் பென்ஸ் சைக்கிளில் பயணித்து வந்தார். அப்போது குதிரைகளில்லா வண்டிகளை உருவாக்குவதற்கான கற்பனையை கார்ல் பென்ஸ் வளர்த்துக் கொண்டார். கல்விக் காலங்கள் கழிந்தபிறகு சில நிறுவனங்களில் கார்ல் பென்ஸ் தொழிற்பயிற்சி பெற்றார். எனினும், எந்த நிறுவனமும் அவருக்கு ஒப்புப்போகவில்லை. பல்வேறு வேலை மாற்றங்களுக்குப் பிறகு வியன்னாவில் இரும்பு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.

பிறகு தனது நண்பரான ரிட்டருடன் இணைந்து கட்டுமானப் பொருட்களை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே தொழில் மிக மோசமாக இருந்தது. அப்போதுதான், கார்ல் பென்ஸைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெர்த்தா ரிங்கெர் கார்ல் பென்ஸின் பங்குகளை வாங்கிக் கொண்டார். இது கார்ல் பென்ஸுக்கு உதவியாக இருந்ததோடு, நம்பிக்கையை அளித்தது. தொழிற்சூழல் சில மாதங்கள் சீராக இருந்தபோதிலும், மீண்டும் இழப்புகளைச் சந்திக்கத் தொடங்கினர்.

குதிரைகளில்லா வண்டிகளை வடிவமைக்கும் கனவுக்கு கார்ல் பென்ஸ் மீண்டும் புத்துயிர் கொடுத்தார். தனது கனவை நனவாக்குவதற்குத் தேவையான தன்னம்பிக்கையைத் திரட்டிய கார்ல் பென்ஸ், அதற்காக உழைக்கத் தயாரானார். கூடுதல் வருமானத்தை ஈட்டும் நம்பிக்கையில் two-stroke எஞ்சினை உருவாக்கும் பணியில் களமிறங்கினார்.

அந்த எஞ்சினுக்கான காப்புரிமையை 1879ஆம் ஆண்டில் கார்ல் பென்ஸ் பெற்றுக்கொண்டார். தனது கடின உழைப்பாலும், புதுமையான சிந்தனைகளாலும் கியர் ஷிஃப்ட் (gear shift), கிளட்ச் (clutch), water radiator உள்ளிட்ட இதர கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமைகளைப் பெற்றார்.

இவரது நிறுவனத்தில் உற்பத்திச் செலவுகள் மிகுதியாக இருந்ததால் அந்நிறுவனத்தைக் கூட்டு நிறுவனமாக மாற்றுமாறு வங்கிகள் கோரிக்கை வைத்தன. பிறகு தனது சகோதரர் மற்றும் நண்பரின் உதவியுடன் கார்ல் பென்ஸ் தனது நிறுவனத்தை கூட்டுப் பங்கு நிறுவனமாக (Joint-Stock Company) மாற்றினார். Gasmotoren Fabrik Mannheim என்று பெயரிடப்பட்ட இந்நிறுவனத்தில் கார்ல் பென்ஸுக்கு வெறும் ஐந்து விழுக்காடு பங்குகளே கிடைத்தன.

மேலும் புதிய தயாரிப்புகளை வடிவமைக்கும்போது கார்ல் பென்ஸின் யோசனைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆகையால் அந்நிறுவனம் தொடங்கப்பட்டு ஓராண்டிலேயே 1883ஆம் ஆண்டில் கார்ல் பென்ஸ் வெளியேறிவிட்டார். கார்ல் பென்ஸ் வெளியேறியதால் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தான் உருவாக்கிய நிறுவனத்திலிருந்து வெளியேறிய கார்ல் பென்ஸ் ஒரு சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் சேர்ந்தார். அங்கு மேக்ஸ் ரோஸ் மற்றும் பிரடரிக் வில்கெல்ம் ஆகியோருடன் இணைந்து Benz & Companie Rheinische Gasmotoren-Fabrik என்ற நிறுவனத்தை உருவாக்கினார் கார்ல் பென்ஸ். இந்த நிறுவனம் வழக்கமாக ‘பென்ஸ் & சீ’ என்று அழைக்கப்பட்டது.

25 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்து விரைவில் நிலையான எரிவாயு எஞ்சின்களை (static gas engines) உற்பத்தி செய்தது. குதிரைகளின் உதவியின்றி சுயமாக இயங்கக்கூடிய வாகனங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பென்ஸ் களமிறங்கினார். அதைச் சாதித்தும் காட்டிய கார்ல் பென்ஸ், தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைகளையும் பெற்றுக்கொண்டார்.

1888ஆம் ஆண்டு முதல் பென்ஸ் தனது வாகனங்களை (Benz Patent Motorwagen) விற்பனை செய்யத் தொடங்கினார். இந்த வாகனமே வரலாற்றில் வர்த்தக ரீதியாக முதல்முறையாக விற்பனை செய்யப்பட்ட ஆட்டோமொபைல் வாகனமாகும். உலகின் முதல் ஆட்டோமொபைல் வாகனத்தைக் கண்டுபிடித்தவர் என்று கார்ல் பென்ஸ் பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.

பல்வேறு பிரச்சினைகளும், சவால்களும் இருந்தபோதிலும், தனது தொடர் முயற்சியால் கார்ல் பென்ஸ் தனது இளவயது கற்பனைகளை நனவாக்கிக் காட்டியுள்ளார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...