வரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா

 வரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா

கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன்.

பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவர் சுரதா என்னும் பெயரில் இலக்கியப் படைப்பாளியாக திகழ்ந்தார்.

செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். இவர் பாரதிதாசனை 1941ஆம் ஆண்டு சந்தித்தார். பின்பு சிறிதுகாலம் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

இவர் மங்கையர்க்கரசி திரைப்படத்திற்கு 1944ஆம் ஆண்டு வசனம் எழுதினார். அமுதும் தேனும் எதற்கு, ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்பது போன்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.

பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது. தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் 1987ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இவரது தமிழ் தொண்டை கௌரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த உவமைக் கவிஞர் சுரதா 2006ஆம் ஆண்டு மறைந்தார்.

ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவு தினம்…..!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார்.

லண்டனில் இருக்கும்போது லோர் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார்.

இயற்பியல் அறிஞரான இவர் ரேடியோ அலைகளில் ஆய்வு செய்து, மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை கண்டுபிடித்தார். இவர் இயற்றிய நூல்கள் உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) மற்றும் தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Mechanism of Plants).

மனஉறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, பொறுமை ஆகியவைகளுக்கு உறைவிடமாய் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரும் வெற்றியும், பெரும் புகழும் ஈட்டியதன் வாயிலாக இந்தியாவின் புகழை உலகில் மிளிரச் செய்த இவர் 1937ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

2007ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...