வரலாற்றில் இன்று – 22.11.2020 ஜல்காரிபாய்
சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள போஜ்லா என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள்வீச்சு உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஜான்சி ராணி லட்சுமிபாய் இவரது போர்த்திறன், துணிச்சல் வீரத்தைக் கண்டு ஆச்சரியமடைந்து, ஜல்காரிபாயை தன் படையில் சேர்த்துக்கொண்டார்.
ஜான்சி கோட்டையின் மீது ஆங்கில அரசு பலமுறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் படையெடுப்புகளை ஜான்சி ராணியின் வீரப்படை முறியடித்தது. அதில் இவரது பங்கு முக்கியமானது.
1857ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரின்போது, மிகப்பெரிய படையுடன் ஆங்கில அரசு ஜான்சியை முற்றுகையிட்டது. கல்பி என்ற இடத்தில், மற்ற புரட்சிப் படைகளுடன் இணைவதாகத் திட்டமிட்டிருந்த ஜான்சி ராணிக்கு, பெரிய படையை எதிர்த்துப் போரிடுவது சவாலாக இருந்தது.
ராணி வேடத்தில் தானே முன்னின்று போரிடுவதாக கூறிய ஜல்காரிபாய், தந்திரமாக ராணியை கோட்டையில் இருந்து தப்ப வைத்தார். அதே நேரத்தில் ஜான்சி படைக்குத் தலைமை வகித்து வீரத்துடன் போரிட்டார். ஆனால், மாபெரும் படையை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளிடம் பிடிபட்டார்.
ஜான்சி ராணியை பிடித்துவிட்டதாக கூறிய ஆங்கில அரசு ஜல்காரிபாயிடம் ‘உங்களை என்ன செய்வது?’ என்று கேட்டனர். அதற்கு ‘தூக்கிலிடுங்கள்’ என்றார். பின்னர், அவர் ராணி அல்ல என்ற உண்மையை அறிந்த ஆங்கில அரசு, அவரது வீரத்தையும், விவேகத்தையும் பாராட்டி விடுதலை செய்தது.
ஜல்காரிபாய் 1858ஆம் ஆண்டு ஜான்சி போரின்போது வீரமரணம் அடைந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன.
முக்கிய நிகழ்வுகள்
1774ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஆங்கிலேய இராணுவ அதிகாரி ராபர்ட் கிளைவ் மறைந்தார்.
1968ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பி.ஹெச்.பி (PHP) நிரலாக்க மொழியை உருவாக்கிய ரஸ்மஸ் லெர்டெர்ஃப் (Rasmus Lerdorf) பிறந்தார்.
1908ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
2005ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தை (video game) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டது.