வரலாற்றில் இன்று – 19.10.2020 நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை
சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார்.
இவர் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டு, முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பிறகு காங்கிரஸில் இணைந்தார்.
இவர் திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடல்.
இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்த இவர் மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார். நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர் பத்மபூஷண் விருது பெற்றுள்ளார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார்.
தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 1972ஆம் ஆண்டு மறைந்தார்.
சுப்பிரமணியன் சந்திரசேகர்
இந்திய வானியல் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தார்.
ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு ‘சந்திரசேகர் லிமிட்’ எனப்படுகிறது.
இவர் தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து ‘நட்சத்திரங்களின் அமைப்பு’ என்ற நூலாக வெளியிட்டார். பத்மவிபூஷண், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ‘ஆடம் பரிசு’, ராயல் சொசைட்டியின் ‘காப்ளே பதக்கம்’ உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.
நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர் 1995ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1943ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி காச நோய்க்கான (Streptomycin) மருந்து Rutgers University-ல் பிரித்தெடுக்கப்பட்டது.