வரலாற்றில் இன்று – 27.08.2020 டி.என்.ராஜரத்தினம் பிள்ளை
அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றவரும், இணையற்ற நாதஸ்வர வித்வானாகத் திகழ்ந்தவருமான டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமருகல் என்ற ஊரில் பிறந்தார்.
இவரது முதல் நாதஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவரின் இசையை ரசிகர்கள் மெய்மறந்து கேட்டனர். முதல் கச்சேரியே அபாரமான வெற்றி அடைந்தது. அதன் பின் பல இடங்களில் கச்சேரிகள் நடைபெற்றன.
‘நாதஸ்வர சக்ரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட இவர், பெயரில் மட்டுமல்லாமல் நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். ‘சங்கீத அகாடமி விருது’,’அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி’ உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும், விருதுகளும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை தான் ஒலித்தது.
ஏவி.எம். செட்டியார், பல மணி நேரம் இவர் இசைத்த ‘தோடி’ ராகத்தைப் பதிவு செய்து ஆறரை மணி நேர இசைத்தட்டை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஈடு இணையற்ற நாதஸ்வரக் கலைஞர் என்று போற்றப்பட்ட டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 1956ஆம் ஆண்டு தனது 58வது வயதில் மறைந்தார்.
மவுண்ட்பேட்டன்
இன்று இவரின் நினைவு தினம்…..!
பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்ஸர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது முழு பெயர் லூயி பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன்.
இவர் தன்னுடைய திறன் மற்றும் கடும் உழைப்பினால் பல முக்கிய உயர் பதவிகளை பெற்றார். கப்பற்படையில் படிப்படியாக உயர்ந்து கேப்டன் பதவியையும் பெற்றார்.
மேலும், 1947ஆம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு சுதந்திர நாடுகளாகப் பிரிப்பதற்குமான விவகாரங்களைத் திறமையுடன் கையாண்டார்.
இவர் ஜுன் 21, 1948ஆம் ஆண்டு வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். பிரிட்டிஷ் வார் மெடல், விக்டரி மெடல், அட்லாண்டிக் ஸ்டார், பர்மா ஸ்டார், இத்தாலி ஸ்டார் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்களையும், விருதுகளையும் வென்றுள்ளார். இவர் தனது 79வது வயதில் (1979) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1879ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் மறைந்தார்.
1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 (ர்நiமெநட ர்ந 178) சேவைக்கு விடப்பட்டது.
1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் கின்னஸ் புத்தகம் வெளியிடப்பட்டது. 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழக எழுத்தாளரான அ.ச.ஞானசம்பந்தன் மறைந்தார்.