வரலாற்றில் இன்று – 24.08.2020 நாரண. துரைக்கண்ணன்
தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளராகவும், இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் தனிமுத்திரை பதித்தவருமான நாரண.துரைக்கண்ணன் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.
இவர் பல்வேறு பெயர்களில் பல கதைகளை எழுதி வந்தாலும் ‘ஜீவா’ என்ற இவரது புனைப் பெயர்தான் பிரபலமாக அறியப்பட்டது. இவரது சரஸ்வதி பூஜை என்ற முதல் கட்டுரை 1924ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழில் வெளியானது.
இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்கள், கதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய உயிரோவியம், நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?, தாசி ரமணி முதலியவை பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் ஆகும்.
இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தனது பத்திரிகையில் தலையங்கங்கள், கட்டுரைகளை எழுதினார். ஆங்கிலேய அரசு அவரைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்தாலும், எங்கள் கொள்கையை விடமாட்டோம், இது எங்களது தேசியக் கடமை எனத் துணிச்சலுடன் அறிவித்தார்.
மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்க வேண்டுமென்பதற்காகப் பாடுபட்டவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். இவர் நற்கலை நம்பி, இலக்கியச் செம்மல் என்னும் பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். வாழ்க்கைக் கலைஞர் என்று மு.வ. அவர்களால் போற்றப்பட்ட இவர் 1996ஆம் ஆண்டு 89வது வயதில் மறைந்தார்.
ராஜகுரு
சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர் ராஜகுரு 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் கேடா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர் ஷிவ்ராம் ஹரி ராஜகுரு.
இவர் இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பில் சேர்ந்தார். இந்த அமைப்பில் பகத்சிங் மற்றும் சுகதேவ் இருவரும் இவருக்கு நெருங்கிய நண்பராக மாறினார்கள். மூவரும் இணைந்து லாலா லஜபதி ராயின் படுகொலைக்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி சாண்டர்ஸை 1928ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனர்.
பிரித்தானிய காவல்துறை அதிகாரி ஜெ.பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில், இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அவர்களுக்கு 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனிவாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முக்கிய நிகழ்வுகள்
1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை மறைந்தார்.
1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
சர்வதேச புதுமை இசை தினம் (International Strange Music Day) : சர்வதேச புதுமை இசை தினம் Patrick Grant என்பவரால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 24ஆம் தேதி கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. நாம் இதுவரை கேட்டிராத புதுமையான இசைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.