கலைவாணர் எனும் மாகலைஞன் – 15 | சோழ. நாகராஜன்

 கலைவாணர் எனும் மாகலைஞன் – 15 | சோழ. நாகராஜன்

15 ) மதுரத்திடம் கிருஷ்ணன் சொன்ன அந்தப் பொய்…

புனேயில் இரண்டாம் நாள் காலைப் பொழுது விடிந்தது. காலை உணவு முடிந்ததும் இயக்குநர் ராஜா சாண்டோ ஊரிலிருந்து வந்திருந்த கலைஞர்களையெல்லாம் அழைத்து ஒன்றாக அமரச் செய்திருந்தார். கலைஞர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அமைதி காத்ததற்குக் காரணம் இருந்தது.

இயக்குநர் ராஜா சாண்டோ மிகவும் கண்டிப்பானவர். கோபக்காரர். கலையின்மீது பெரிய ஈடுபாடும் மரியாதையும் கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாரையும்விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர். மல்யுத்த வீரராகவும், தேகப் பயிற்சியாளராகவும் இருந்து சினிமா பேசாத காலத்திலோயே வடஇந்தியர்களின் மனங்களைத் தனது கலைத் திறத்தால் கொள்ளை கொண்டவர். கலைஞர்களைக் கையாள்வதில் மிகவும் கறாரானவர். அதனாலேயே எந்தக் கலைஞரும் அவரிடத்தில் மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்வது வழக்கம்.

கூடியிருந்த கலைஞர்களிடத்தில் ராஜா சாண்டோ அப்போது எடுக்கப்போகும் படத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். படத்தின் பெயர் வசந்தசேனா. (1936) கிருஷ்ணனுக்கு இதில் கதாநாயகன் சாருதத்தனின் நண்பன் மைத்ரேயன் எனும் குணச்சித்திர வேடம். கிருஷ்ணனுக்கு ஜோடியாக யாரைத் தேர்வு செய்யலாம் என்று யோசித்தார் இயக்குநர். பெண்கள் பலரிடமும் கேட்டார். யாரும் வாயைத் திறக்கவில்லை.

ராஜா சாண்டோ கிருஷ்ணனைப் பார்த்துக் கேட்டார்:

“கிருஷ்ணா, நீ யாரையாவது மனதில் யோசித்து வைத்திருக்கிறாயா?”

கிருஷ்ணன் இதுதான் வாய்ப்பு என்று சட்டென மதுரத்தை நோக்கிக் ஆள்காட்டி விரலை நீட்டினார்.

“இவரைத்தான் நான் யோசித்து வைத்திருக்கிறேன்…”

– என்றார் வார்த்தைகளிலும்.

அந்தப் படத்தில் கிருஷ்ணனும் – மதுரமும் ஜோடி என்று முடிவாயிற்று. மதுரத்துக்கு கதாநாயகி வசந்தசேனாவின் தோழி ரதனிகா வேடம். நாயகனும் நாயகியும் மட்டுமல்லாமல் நாயகனின் தோழனும் நாயகியின் தோழியும் படத்தில் காதலித்தார்கள்.

வாழ்க்கையில் அவர்கள் ஜோடி சேரப்போவதற்கு அதுவே முதல் ஒத்திகை போலானது. ஆமாம். என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ. மதுரம் ஜோடியின் முதல் படம் அதுதான் அல்லவா? அந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் இருந்தது. தமிழில் 100வது பேசும்படம் அது.

நடிப்பு சொல்லித்தரும் சாக்கில் அடிக்கடி மதுரத்தைத் தேடிப் போகத் தொடங்கினார் கிருஷ்ணன். கிருஷ்ணன் வராத போதுகளிலெல்லாம் மதுரமே கிருஷ்ணனைத்தேடிச் செல்லத் தொடங்கினார். ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்ட இனம் தெரியாத ஈர்ப்பை உணர்ந்தார்கள்.

அந்த சமயத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்டரமணி என்பவர் மதுரத்திடம் வந்து இப்படிச் சொன்னார்:

“ஒரு முக்கியமான சேதி சொல்லப்போகிறேன்…”

“சொல்லுங்க… என்ன அது?” – இது மதுரம்.

“எப்போதும் நீ தன்னுடனேயே இருக்கணும்னு அவர் விரும்புறார்…” – இது சட்டாம்பிள்ளை.

“யாரு?” – இது மதுரம்.

“வேற யார்? நம்ம கிருஷ்ணன்தான்.” – இது சட்டாம்பிள்ளை வெங்கட்டரமணி.

இப்படியொரு தகவல் மதுரத்தை வந்தடைந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கிருஷ்ணனே மதுரத்தைத் தேடி வந்து நின்றார்.

மதுரம் கிருஷ்ணனை வைத்தகண் வாங்காமல் பார்த்தார். அவரிடம் கேட்டார்:

“நான் உங்களுடனேயே இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்களாமே?”

தருணம் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணன் சட்டென பதில் சொன்னார்:

“ஆமாம்…”

மதுரம் மூச்சை இழுத்துவிட்டார். கிருஷ்ணனைப் பார்த்தார். கிருஷ்ணன் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.

மதுரம் கேட்டார்:

“உங்களுக்குக் கல்யாணம் ஆயிடிச்சா?”

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கிருஷ்ணன் சின்ன இடைவெளி விட்டு பதில் சொன்னார்:

“இல்லை!”

கிருஷ்ணன் – மதுரம் இருவரின் நடவடிக்கைகளைக் கவனித்துவந்த இயக்குநர் ராஜா சாண்டோ இருவரையும் அழைத்துப் பேசினார்.

“உங்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருப்பதைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் நீங்கள் இணையவேண்டும் கணவன் – மனைவியாக. அதற்கு நான் பொறுப்பு. கிருஷ்ணா நீ இவளை வாழ்வின் இறுதிவரை கைவிட மாட்டாயே?”

“நிச்சயம் கைவிட மாட்டேன்.”

ராஜா சாண்டோ

புனேயில், ராஜா சாண்டோ தங்கியிருந்த வீட்டிலேயே கிருஷ்ணனும் மதுரமும் மாலை மாற்றிக்கொண்டு கணவன் மனைவி ஆனார்கள். இயக்குநர் அவர்களை இணைத்துவைத்து ஆசி கூறினார்.

மதுரத்தின்மீது தான் வைத்திருந்த அளவற்ற காதலால் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று கூறிய கிருஷ்ணனுக்கு உண்மையில் அவரது ஊரில் நாகம்மாள் என்பவருடன் ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது. மதுரத்தை அடையவேண்டி அவர் சொன்ன பொய்யானது ரொம்ப நாட்கள் நீடிக்கவுமில்லை.

விரைவிலேயே அந்தக் குட்டு உடைந்தது. ரகசியம் அம்பலமானது. தன் கணவர் கிருஷ்ணனுக்கு ஏற்கெனவே ஒரு மனைவி உண்டு என்கிற இடிபோல விழுந்த அந்த ரகசியத்தை மதுரம் எப்படி அறிந்துகொண்டார்? அப்போது என்னவெல்லாம் நடந்தது?

பார்ப்போம்.

(கலைப் பயணம் தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |

கமலகண்ணன்

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...