அஷ்ட நாகன் – 4| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 4| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

பாம்புகளில் ‘நாகங்கள்’ மட்டுமே தனித்தன்மை வாய்ந்தது.சக்தி மிக்கது.நாம் முதலில் பாம்புகளுக்கும் நாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டியது அவசியம்.பாம்பு என்பது பொதுப்பெயர்.நாகம் என்பது சிறப்புப் பெயர். பாம்புகளில் படமெடுத்து ஆடும் பாம்புகளை மட்டுமே நாகம் என்று கூறுவர்.நாகங்களில் மூன்று வகை மட்டுமே தெய்வ சக்தி வாய்ந்தவை.அவற்றைப் பற்றி அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கமாகக் கூறுகிறேன்.தற்போது நாகங்களில் கருநாகத்தைப் பற்றி சில செய்திகளைக் காண்போம்.

கருநாகத்தை ‘கிருஷ்ண சர்ப்பம்’ என்றும் கூறுவர்.நவகிரகங்களில் கருநீலமும் கருப்பு வண்ணமும் சனீஸ்வர பகவானுக்கு உகந்த நிறமாகக் கருதப்படுகிறது.இதன் மூலம் கருநாகம் சனீஸ்வரனின் அம்சம் என்பதை உணரலாம்.கருநாகங்களில் ‘கார்க்கோடகன்’ என்னும் நாகம் தேவநாகம் ஆகும்.ஒருவரின் வீட்டையோ அல்லது உடலையோ பாம்பு சுற்றுவது போல கனவு கண்டால்,அவரை சனீஸ்வரன் பிடிக்கப்போகிறார் என்று பொருளாகும்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

ந்தனின் கழுத்தை கருநாகம் அலங்கரித்துக் கொண்டிருந்தது.எட்டடி நீளம் கருமையான வெல்வெட்டு நிறம்.நொடிக்கு ஒருமுறை அதன் நாக்கை ‘ஸ்ஸ்ஸ்…’ என்ற சத்தத்தை எழுப்பி சுற்றியிருப்பவர்களை அச்சமூட்டியது.

நந்தனை மக்கள் கூட்டம் சுற்றி வளைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.ஒரு சிலர் பேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டுக் கொண்டிருந்தனர்.எவரும் நந்தனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை.நந்தன் கற்சிலை போல அசைவின்றி நின்றுக் கொண்டிருந்தான்.அவன் உச்சந்தலையில் இருந்து வியர்வை அருவி போல உடலெங்கும் ஓட ஆரம்பித்தது.

நந்தனின் சப்த நாடியும் அடங்கி விடுவது போன்ற பிரம்மை ஏற்பட்டது.நந்தன் தன் வாழ்வின் கடைசி நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தான்.

அப்போது மக்கள் கூட்டத்திலிருந்து இருளன் ஒருவன் நந்தனை காப்பாற்ற முன் வந்தான்.

“சாமி!கொஞ்சம் அசையாமல் அப்படியே இருங்க.நான் உங்களை காப்பாத்துறேன்” என்றான்.

நந்தனும் சரி என்பது போல கண்சிமிட்டி நின்றான்.

தமிழகத்தில் மூவேந்தர்கள் ஆண்ட காலத்தில் காடுகளை அழித்து நகரங்களாக உருவாக்கினர்.அப்போது இருளர்கள் பாம்புகளை அகற்றுவதற்கு பெரிதும் உதவினார்கள்.இருளர்கள் பாம்பின் உடலிலிருந்து வெளிப்படும் வாசனையை வைத்தே, அது எந்த வகை பாம்பு…எவ்வளவு நஞ்சு சுரக்கும் என்பதை துல்லியமாகக் கூறி விடுவார்கள்.

பாம்புகளில் கருநாகமும் ராஜநாகமும் தீண்டினால் உயிர் பிழைப்பது மிகக்கடினம். எனவே,நந்தனின் கழுத்தில் உள்ள கருநாகத்தை பிடிக்க அந்த இருளனும் மிகுந்த பதட்டத்துடனும் எச்சரிக்கையுடனும் சென்றான்.

அவன் தன் ஜோல்னா பையில் வைத்திருந்த ‘கருடக்கிழங்கு’ என்னும் மூலிகையை எடுத்து, படமெடுத்த நிலையிலிருந்த கருநாகத்தின் முன் நீட்டினான். பிறகு தன் வாய்க்குள்ளே ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரித்தான். கருநாகமும் சில நொடிகளில் தன் சீற்றத்தை நிறுத்தியது.

அந்த இருளனும் சற்று தயக்கத்துடன் அந்த பாம்பை பிடிக்க நெருங்கினான்.யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மின்னல் வேகத்தில் அங்கே வந்த அரவிந்தன் அந்த கருநாகத்தின் கழுத்தை லாவகமாகப் பிடித்தான். அப்படியே நந்தனின் கழுத்திலிருந்து அந்த பாம்பை எடுத்து அருகிலிருந்த புற்றருகே வீசினான்.அது படமெடுத்த நிலையில் நந்தனையும், அரவிந்தனையும் சில விநாடிகள் பார்த்து விட்டு அதன் புற்றுக்குள் சென்று மறைந்து விட்டது.

சுற்றியிருந்த மக்கள் கூட்டம் சில நிமிடங்களில் கரைய ஆரம்பித்தது.

நந்தனிடம் அரவிந்த் எப்படி அந்த கருநாகம் அவன் கழுத்தில் வந்தது என்று கேட்டான்.

நந்தன்,பொன்னியம்மாள் பாட்டி வந்தது…பாம்பு புற்றில் பூ வைத்து வணங்கியது…வேப்ப மரத்தின் உச்சியிலிருந்து கருநாகம் அவன் கழுத்தில் விழுந்தது என சகலத்தையும் ஒரு குறும்படம் போல கூறினான்.

அனைத்தையும் கேட்ட அரவிந்தனின் முகத்தில் ஆச்சர்ய ரேகைகள் படர ஆரம்பித்தன. அரவிந்தன் பேச ஆரம்பித்தான்.

“நந்தா…நேத்து ராத்திரி என் கனவுல பாம்பு வந்தது.இப்போ உன் கழுத்துல பாம்பு மாலை மாதிரி விழுந்திருக்கு.ஆனால்,யார் செஞ்ச புண்ணியமோ உனக்கு ஒண்ணும் ஆகல.”

“அரவிந்தா…நேத்திக்கு நீ கண்ட கனவைக் கூட நான் பெருசாக எடுத்துக்கல. ஆனால், அந்த கனவு மெய்ப்படற வகையில இப்படியெல்லாம் நடக்கறது எனக்கு ஆச்சர்யமாக இருக்கு.”

நந்தனின் பேச்சை ஆமோதிப்பது போல திடீரென அந்த புற்றுக்குள்ளிருந்து வெளிவந்த கருநாகம் சத்தியம் செய்வது போல தரையில் மூன்று முறை கொத்திவிட்டு மீண்டும் புற்றுக்குள் சென்றுவிட்டது.

இவை அனைத்தையும் கடைக்கு வெளியிலிருந்து பார்த்த இருளன், அவசர அவசரமாக அவர்களின் அருகில் வந்து பேச ஆரம்பித்தான்.

“தம்பிங்களா ! நீங்க ரெண்டு பேரும் பேசுனதை கேட்டேன்.அதுமட்டுமில்லாமல்,உங்கள் கனவு பலிக்கும்ங்குற மாதிரி அந்த கருநாகமும் புத்துல இருந்து வெளிய வந்து மூணு முறை சத்தியம் செஞ்சிட்டு போகுது.”

“ஐயா,என் கழுத்துல பாம்பு சுத்திக்கிட்டு இருந்தப்போ நீங்கதான் காப்பாத்துறதுக்கு தைரியமாக முன் வந்தீங்க.ரொம்ப நன்றீங்க !”என்று நந்தன் உணர்ச்சி பொங்க பேசினான்.

“பரவாயில்லை தம்பி.மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்யலன்னா எப்படி?எதுக்கும் நீங்க ரெண்டு பெறும் ஜாக்கிரதையாக இருங்க.”

“ஐயா,நீங்க ஒரு கிழங்கை காட்டினதும் அந்த பாம்பு அப்படியே அடங்கிடிச்.அது என்ன கிழங்கு?”என்று கேட்டான் நந்தன்.

“நான் ஒரு இருளன்.பாம்போட தடத்தை வச்சே அது என்ன பாம்புன்னு சொல்லிடுவேன். எப்பேற்பட்ட பாம்பாக இருந்தாலும் புடிச்சிடுவேன்.அதனால தான் என்னை எல்லோரும் ‘பாம்புக்காரன்’னு சொல்லுவாங்க.”

“அதெல்லாம் சரிங்க.அந்த கிழங்கை பத்தி சொல்லுங்க.”

“சொல்றேன் தம்பி.அது ‘ஆகாச கருடக் கிழங்கு’.அந்த கிழங்கை நம் கைவசம் வச்சிருந்தா எந்த பாம்பும் நம்மை ஒண்ணும் செய்யாது.நம்ம வீட்டு வாசல்ல அந்த கிழங்கை ‘கருப்பு’ கயிறுல கட்டி வச்சாக்கா எந்த வித தீய சக்தியும் வீட்டை அண்டாது.சில பேர் இந்த கிழங்கை விஷ முறிவு மூலிகையாவும் பயன்படுத்துவாங்க.”

“ரொம்ப நன்றிங்க.எங்களுக்கு ஒரு உதவி செய்றீங்களா?”

“கண்டிப்பா செய்றேன் சொல்லுங்க.”

“அது ஒண்ணுமில்ல ஐயா,புத்துல இருக்குற கருநாகப் பாம்பை பிடிச்சிட்டு போய்டுறீங்களா?”

“மன்னிச்சிடுங்க தம்பி ! என்னால முடியாது.பெரும்பாலும் நான் புத்துல இருக்குற பாம்பை பிடிக்கிறது இல்ல.புத்து கோயில் மாதிரி.பாம்பு சாமி மாதிரி !”

“இது என்ன புது கதையா இருக்கு?”

“கதையில்ல தம்பி நிஜம்! பெரும்பாலும் எல்லா பாம்பும் புத்துல நிரந்தரமாக வசிக்கிறது இல்ல.அதுவும் இவ்வளவு மக்கள் நடமாட்டம் உள்ள இந்த இடத்துல ஒரு கருநாகம் தொடர்ந்து வசிக்கிதுன்னா அதுக்கு ஒரு சரியான காரணம் இருக்கும்.அது தெய்வீக சக்தி வாய்ந்த நாகமாகத்தான் இருக்கும்.இத்தனைக்கும் அந்த பாம்பு நெனைச்சிருந்தாக்கா உடனே உங்களை கொத்தி தீத்திருக்கும்.”

பாம்புக்காரன் என்ற அந்த இருளனின் பேச்சைக் கேட்ட இருவரும் சற்று ஆடிப்போய் விட்டனர்.

“அப்போ இந்த விஷயத்துல இருந்து எங்களுக்கு பயம் நீங்கறதுக்கு என்ன பண்ணனும்?” என்று நறுக்காக கேட்டான் அரவிந்த்.

“நீங்க இவ்வளவு தூரம் கேக்கறதால சொல்றேன்.முதல்ல இதை புடிங்க”என்று கூறிவிட்டு தன் பையிலிருந்த இரண்டு கருடக்கிழங்கை ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.

“தம்பிங்களா இந்த கருடக்கிழங்கை உங்கக்கூட எப்பவும் வச்சிக்கிங்க.அது மட்டும் இல்லாமல்,கொல்லிமலையில இருக்குற ‘அறப்பளீஸ்வரர் உடனுறை பார்வதி’ அம்மாவை வணங்கிட்டு உங்க ரெண்டு பேரு பேரையும் சொல்லி ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வாங்க.”

“கொல்லிமலைக்கா?” இருவரும் அதிர்ச்சியுடன் கேட்டனர்.

“ஆமா…போயிட்டு வாங்க நல்லதே நடக்கும்”என்று கூறிவிட்டு அவர்களின் பதிலை எதிர் பார்க்காமல் அந்த இருளன் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் ஒருவித அச்சத்தோடு பார்த்துக் கொண்டனர்.

– தொடரும்…

< இரண்டாம் பாகம்

கமலகண்ணன்

8 Comments

 • Interesting one
  Learning a lot

  • Thank you very much…feeling good.

 • உயிர் பயம் நீங்கியது கண்டு மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் பயமும் பயணமும் தொடர்கிறது. ஆவல் தொடர்கிறது. அருமை.

  • என்றென்றும் தங்கள் அன்பும் ஆதரவும் கண்டு மனம் மகிழ்கிறேன் நண்பரே… மகிழ்ச்சி.

 • Really very interesting and superb story line keep it up b congrats 💐❤️

  • Thank you very much for your precious feedback…

 • கதையை அடுத்த கட்டத்துக்கு அழகான வரிகளில் சுவாரஸ்யமாக எடுத்து சென்று உள்ளீர்கள்…

  இடைஇடையே சிறு டுவிஸ்ட் 👌

  அடுத்து இருளர் (பாம்பாட்டி) கேள்வி பட்டு உள்ளேன். ஆனால் அந்த கிழங்கு மற்றும் அதன் பெயர் பயண்பாடு குறித்து முதல் முறையாக படிக்கிறேன்.. அவ்வளவு அழகு சகோ

  அடுத்து கொல்லிமலை எப்போது செல்வார்கள்?
  அந்த புற்றில் பாம்பு வடிவில் ஆன்மீக சக்தி உள்ளதா?? ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களில் நானும் ஒருவனே!!

  வாழ்த்துக்கள் எனதருமை சகோ 💐

  • தங்கள் விமர்சனம் கண்டு மனம் மகிழ்கிறேன் விமல்… மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published.