ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம், புட்டபர்த்தியில், நேற்று காலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மேம்பட்ட நடுத்தர போர் விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினர்.
அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது: புட்டபர்த்தியில் 650 ஏக்கரில் ரூ.15,803 கோடி செலவில் போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஆந்திராவுக்கு வர உள்ளன. இனி ராயலசீமா மாவட்டங்கள் வறண்ட மாவட்டங்கள் அல்ல. பணம் கொழிக்கும் மாவட்டங்களாக மாறும். கடப்பா இரும்பு தொழிற்சாலை பணிகள் ஜூன் மாதம் தொடங்கி 2028-க்குள் முடிவடையும். நாட்டிற்கே ஆந்திரா ஒரு பாதுகாப்பு கவசமாக மாற உள்ளது.

ஒரு காலத்தில் தங்கம் என்றாலே கேஜிஎஃப். ஆனால் இப்போது தங்கம் என்றால் ஆந்திராவில் உள்ள ஜொன்னகிரி கோல்ட் ஃபீல்ட் ஆகும். இந்த ஆண்டில் இங்கு 600 கிலோ தங்கமும், அடுத்த ஆண்டு முதல் 1500 கிலோ தங்கமும் உற்பத்தி செய்யப்படும். தங்க உற்பத்தியில் ஆந்திரா புரட்சியை ஏற்படுத்தும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆந்திராவில் கர்னூலில் 8 ட்ரோன் நிறுவனங்கள் இணைந்து செயல்பட போகின்றன. வருவாய், மருத்துவம், விவசாய துறைகளுக்கு கூட ட்ரோன் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரு கால கட்டத்தில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட வகையில், வெளிநாடுகளில் இருந்து அதிகமாக பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அனைத்தும் நாமே தயாரித்து கொள்கிறோம்.

2004-ல் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்புள்ள போர் சம்பந்தப்பட்ட ஆயுத தயாரிப்பு மையங்கள் மட்டுமே நம்மிடம் இருந்தன. ஆனால் இப்போது ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பில் ஆயுத தயாரிப்பு மையங்கள் உள்ளன என்பதில் நாம் பெருமை கொள்வோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
இவ்விழாவில், மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திர மாநில அமைச்சர்கள் லோகேஷ், சத்யபிரசாத், பரத், சத்யகுமார் யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
