கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மகளிருக்கு மாதந்தோறும் தலா ரூ. 1 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளுக்குப்பின் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தியது. அதன்படி, 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயனாளிகளாக கண்டறியப்பட்டு மாதம் தோறும் 15ம் தேதி அவர்களில் வங்கி கணக்குகளில் தலா ரூ. 1 ஆயிரம் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. புதிய அரசு ஆட்சியமைத்துள்ள நிலையில் வழக்கம்போல் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ. 1 ஆயிரம் பயனாளர்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 கோடியே 31 லட்சம் பெண் பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ. 1 ஆயிரம் இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் நேற்று கூறியிருந்த நிலையில் மே மாதத்திற்கான உரிமைத்தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கான புதுமை பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தலா ரூ. 1 ஆயிரம் உதவித்தொகை மாணவ-மாணவியரின் வங்கி கணக்கில் தவெக அரசால் நேற்று வரவு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
