தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

தவெகவின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளன. அதே சமயம், தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் ஐ.யூ.எம்.எல். அறிவித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஆட்சி, அதிகாரத்தில் விசிக பங்கு கேட்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியமைக்க திருமாவளவனிடம் ஆதரவு கோரி விசிக அலுவலகத்திற்கு விஜய் நேரில் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
