சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யின் டிஜிட்டல் கற்றல் தளமான ஸ்வயம் பிளஸ், சென்னை ஐ.ஐ.டி. பிற வர்த்தகத்துடன் இணைந்து அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு பிரசாரத்தின் கீழ் 3 புதிய செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஸ்வயம் பிளஸ் செயல்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இந்த பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
வளர்ந்து வரும் என்ஜினீயர்களுக்கான செயற்கை நுண்ணறிவு, நிர்வாகிகளுக்கான செயற்கை நுண்ணறிவு, என்ஜினீயரிங் தூண்டல் ஆகிய இந்த 3 பாடப்பிரிவுகள் தொடக்க நிலையில் கற்போருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை கற்க கோடிங் அல்லது செயற்கை நுண்ணறிவு குறித்த அனுபவம் எதுவும் தேவையில்லை.

வெவ்வேறு கல்வி, தொழில் பின்னணியுடைய கற்போருக்காக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் இந்த பாடப்பிரிவுகள் செயற்கை நுண்ணறிவின் நடைமுறை பயன்பாடுகளில் கவனம் செலுத்தும் விதமாக சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்களால் கற்பிக்கப்படுகின்றன. இந்த பாடப்பிரிவுகளை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தொடங்கி வைத்தார்.
http://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதிக்குள் இந்த பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
விருதுநகர்,
ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்குரிய மாநிலம் முழுவதுமான வரையாடுகள் கணக்கெடுப்பு நேற்று காலை தொடங்கியது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த வனத்துறையினர் கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை பொறுத்தவரை மலை உச்சி பகுதியான பேய்மலை, மொட்டை உள்ளிட்ட பல்வேறு உயரமான பகுதிகளில் ஏராளமான வரையாடுகள் வசித்து வருகின்றன. இத்தகைய வரையாடுகள் மேற்கு தொடர்ச்சி மலை உச்சி பகுதியில்தான் காணப்படும். இவை பாதுகாப்பு கருதி கூட்டம், கூட்டமாக மலை உச்சி பகுதியில் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி உள்ளது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை காப்பகம் மற்றும் பல்வேறு மலை உச்சி பகுதிகளில் வசிக்கும் இந்த வரையாடுகளை கணக்கெடுப்பதற்காக 3 முதல் 4 நாட்கள் மலையிலேயே தங்கியிருந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு தேவையான உணவு பொருட்கள் உள்பட அனைத்து வசதிகளும் கணக்கெடுப்பில் ஈடுபடும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், வனவிலங்கு ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரையாடுகள் இருக்கும் இடம் முன்பே தேர்வு செய்யப்பட்டு விட்டது. அதனால் கணக்கெடுப்பாளர்கள் அந்த பகுதிகளுக்கு விரைந்து சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கிய நிலையில், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை வரை நடக்கிறது. கணக்கெடுப்பில் ஈடுபடும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்களை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் வாக்கி-டாக்கி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகளுக்காக 150 பேர் அடங்கிய 35 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
