மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி (அதாவது நேற்று முன்தினம்) நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, புதிய வரவான தமிழக வெற்றிக்கழகம் என 4 முனை போட்டி நிலவியது.

இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனையாக தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவானது.

சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் திரட்டினார். அவர், ஒரு மாத காலம் ஓய்வின்றி தேர்தல் களப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டார். அதன்படி அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை புறப்பட்டு சென்று, அங்கிருந்து சாலைமார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். அங்கு அவர் ஒரு வார காலம் குடும்பத்தினருடன் தங்கி இருந்து ஓய்வு எடுக்க உள்ளார். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!