தமிழகத்தில் வேட்பு மனுதாக்கலுக்கு இன்று கடைசி நாள்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க., சசிகலா-டாக்டர் ராமதாஸ் அணி என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் போட்டி களத்தில் குதித்துள்ள வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கினார். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனம் (பஸ்) மூலம் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா (விருத்தாசலம்) உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்கிறார்கள்.

வேட்புமனுக்கள் முடிந்தவுடன் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 9-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!