புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, நம் நாட்டில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.
இதனிடையே, இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தற்போதைய மேற்கு ஆசிய மோதலை அரசு கையாளும் விதத்தை கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையில், மாநிலங்களவையில் பேசிய சிபிஐ(எம்) எம்.பி. ஜான் பிரிட்டாஸ், “2003ம் ஆண்டு இராக் மீதான அமெரிக்காவின் போரைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல ஈரான் விவகாரத்திலும் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.விஜய் வசந்த், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அதன் விலையில் நடப்பதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
