சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரீயூனியன் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மைதானத்தில் ஏராளமான சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
வரும் 28-ம் தேதி முதல் சிஎஸ்கே உள்ளிட்ட10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2026 சீசன் போட்டி தொடங்கவுள்ளது. இதையொட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ‘ரோர் 26’ என்ற சிஎஸ்கே ரீயூனியன் நிகழ்ச்சிக்கு சிஎஸ்கே நிர்வாகம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

காட்சிப் போட்டி, இசை நிகழ்ச்சி, பொழுது போக்கு நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என பல அம்சங்களுடன் நிகழ்ச்சி நடந்தேறியது. இந்த நிகழ்ச்சிகளைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று மைதானத்தில் குவிந்தனர். நிகழ்ச்சியில் சிஎஸ்கே முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடன், முரளி விஜய், எஸ். பத்ரிநாத் போன்ற வீரர்கள் மைதானத்துக்கு வந்தபோது ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.
அணியின் நட்சத்திர வீரர் தோனி மைதானத்தில் நுழைந்தபோது ரசிகர்கள் பலத்த கரகோஷத்தை எழுப்பி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்கள் மற்றும் புதிய வீரர்கள் பங்கேற்ற நட்பு ரீதி யிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தேறியது.
