இன்று புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை,

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தபின், இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தினார். இந்த திட்டத்திற்காக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 1.63 கோடி பெண்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

அதில் தகுதியின் அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்று தமிழக அரசு பெயர் சூட்டியது. பின்னர் இந்த திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது, அதன்படி சிலர் இந்த திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

தமிழக அரசின் கணக்கீட்டின்படி, சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது, ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில், இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரத்து 926 கோடியே 35 லட்சமும், 2024-25-ம் நிதியாண்டில் ரூ.13 ஆயிரத்து 790 கோடியே 61 லட்சமும் செலவிடப்பட்டது. இந்த நிதியாண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை ரூ.9 ஆயிரத்து 121 கோடியே 49 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ரூ.30 ஆயிரத்து 838 கோடியே 45 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

இந்த உரிமைத்தொகை பெற ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் என ஏற்கனவே வகுக்கப்பட்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன.

இந்த திட்டத்தில் முன்பு நான்கு சக்கர வாகனம், அதாவது கார் இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது அதில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி கார் இருப்பவர் அதனை டாக்சி பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் அவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்று கொள்ளலாம்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மொத்தம் 28 லட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் தற்போது 17 லட்சம் பெண்கள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அவர்களுக்கு நேரு விளையாட்டரங்களில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். அதன் மூலம் தமிழகத்தில் கலைஞர் உரிமைத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.34 கோடி ஆகிறது.

புதிதாக தற்போது இந்த திட்டத்தில் இணைந்த பெண்களுக்கு வழக்கம் போல 15-ந்தேதி அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 சேர்ந்துவிடும். தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் வகையில் மீண்டும் அவர்கள் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதற்கான அறிவிப்பும் இன்று வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!