இன்றைய முக்கிய நிகழ்வுகள் (நவம்பர் 11)

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அல்ஹாஜ் பாரத ரத்னா மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த நாள் தேசிய கல்வி தினம்

இந்தியத் தந்தைக்கும் அரபுத் தாய்க்கும் பிறந்தவர்.

மௌலானா அவர்கள் மக்காவில் மார்க்கக் கல்வி பயின்றவர்

குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியவர்.

காங்கிரஸ் கட்சி வரலாற்றில் மிக இளம் வயதில் (35)

தலைவரானவர்.

இந்தியத் துனை கண்ட வரலாற்றில் மிக முக்கிய காலமான 1940 – 1949 வரை காங். கட்சியின் தலைவராக இருந்தவர்.

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் (1947 – 1958)

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை…ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்றார்.

இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியான IIT – யை 1951 இல் நிறுவியவர்.

UGC என்ற பல்கலைக் கழக மானியக் குழுவை 1953 ல் வடிவமைத்தவர்.

IIS என்ற இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியவர்.

சாகித்ய அகாடமியை உருவாக்க வழியமைத்தவர்.

இந்தியாவின் மிக உயர்வான பாரத ரத்னா விருது அவருக்கு 1992 இல் நீண்ட கால தாமதத்திற்குப் பின் வழங்கப்பட்டது.

முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது, போர்நிறுத்த ஒப்பந்தம் அன்று காலை 11 மணிக்கு நடைமுறைக்கு வந்தது. ஆம்..நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்தப் போர், ஜெர்மனி மற்றும் நேச நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்தது அதாவது 90 லட்சம் போர் வீரர்கள், 1 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிரைக் குடித்த முதல் உலகப் போர், உலக நாடுகளின் வரலாற்றையும் வரைபடத்தையும் மாற்றியமைத்தது. 1914-ல் தொடங்கிய இந்தப் போர், சரியாக 4 ஆண்டுகள் 4 மாதங்கள் நடைபெற்றது. ஆஸ்திரியா – ஹங்கேரி, ஜெர்மனி, பவேரியா, ஓட்டாமான் பேரரசு உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் போரில் ஈடுபட்டன. ஏப்ரல் 1917-ல் பிரிட்டனுக்கு ஆதரவாகப் பலம் வாய்ந்த அமெரிக்கா களமிறங்கியது. எனினும், 1918 தொடக்கம் வரை நேச நாடுகளின் படைகளுக்கு ஜெர்மனி சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தது. மார்ச் 1918-ல் பிரான்ஸின் மேற்குப் பகுதியில் நடந்த உக்கிரமான சண்டையில் பிரிட்டன் படைகளைச் சிதறடித்தது ஜெர்மனி. எனினும் அதன் பலம் நீடிக்கவில்லை.பிரிட்டன் – பிரான்ஸ் படைகள் திருப்பித் தாக்கத் தொடங்கின. அதன் பின்னர் ஜெர்மனிக்குப் பின்னடைவுதான். ‘வெற்றி நம் பக்கம் இல்லை’ என்று ஜெர்மனியின் கூட்டணி நாடுகள் முடிவுக்குவந்தன. “இனிமேல் அமைதி காப்போம்; போரில் ஈடுபட மாட்டோம்” என்று தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஜெர்மனி கையெழுத்திட்டது. 11.11.1918-ல் காலை 11 மணிக்கு முதல் உலகப் போர் முடிவடைந்தது. அன்று காலை போர்க்களத்தில் இருந்த தளபதிகள் தங்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சரியாக 11 மணிக்கு ‘போர் முடிந்தது’ என்று அறிவித்தபோது வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அதேசமயம், போர் நிற்கப்போகும் சமயத்திலும் சில தளபதிகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இதனால் கடைசி நேரத்தில் தேவையில்லாமல் பல வீரர்கள் உயிரிழந்தார்கள்.

அமெரிக்காவில் ஹைவேஸூக்கு எண் குறிப்பிடும் முறை உருவான நாள் . ஆம்.. அச்சமயம் மிகவேகமாக வளர்ந்துகொண்டிருந்த அமெரிக்காவில், என்ஜின் பொருத்தப்பட்ட (ஆட்டோமொபைல்) வாகனங்களும் விரைந்து பெருகின. மிகப் பெரியதாக விரிந்து பரந்திருந்த அந்நாட்டின் நிலப்பரப்பும் அதற்குக் காரணமாக அமைந்தது. சரக்குகளை எடுத்துச் செல்ல, ரயில்கள் வந்திருந்தாலும், ரயில்பாதைகள் அமைக்கவேண்டிய அவசியமின்றி, எல்லா இடங்களுக்கும் இந்த வாகனங்கள் சென்றன. 1903இல் சான்ஃப்ரான்சிஸ்கோ, நியூயார்க் இடையிலான ஐயாயிரம் கி.மீ.க்குச் சற்றே குறைவான தொலைவை, முதன்முதலாகக் காரில் பயணித்து, ஹொரேஷியா ஜாக்சன் கடந்தது, அமெரிக்கா முழுவதும் பேசப்பட்டது. உண்மையில், நாடு முழுவதும் சாலைகளே இல்லாத அக்காலத்தில், காடு-மேடெல்லாம் சுற்றி அவர் அப்பயணத்தை மேற்கொண்டது, சாலைகளுக்கான தேவையை உணர்த்தியது. வாகனப் பாதை என்ற பெயரில் ஆங்காங்கே சாலைகளை அமைத்திருந்த தனியார் நிறுவனங்கள்(ஆம்! தனியார் நிறுவனங்கள்தான் சாலைகளையும் அமெரிக்காவில் அமைத்தன!), தங்களுக்குள் கூட்டமைப்புகளை உருவாக்கி, வருவாய் வருமிடங்களில் அவற்றை இணைத்ததுடன், சாலைகளை அடையாளங்காட்டும் சின்னங்களையும் நிறுவின. 1916இல்தான், சாலை உதவிக்கான கூட்டரசுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, சாலை அமைப்புக்கான அரசு உதவிகள் தொடங்கின. தொலைவிலுள்ள கிராமப் பகுதிகளிலிருந்த விவசாயிகளுக்கு கடிதங்களை எடுத்துச்செல்லும் ‘ரூரல் ஃப்ரீ டெலிவரி’ திட்டத்துக்கான வாகனங்கள் செல்வதே முதன்மை நோக்கமாக இருந்ததுடன், தேவைப்படும் சாலைகளுக்கான அனுமதியும் விவசாயத் துறையால்தான் செய்யப்பட்டது என்பதும், கிராமப்புறங்களிலிருந்து விவசாய உற்பத்திப் பொருட்களை வணிகப்படுத்துவதற்கான கட்டமைப்பாகவே இச்சாலைகள் அமைக்கப்பட்டன என்பதை உணர்த்துகின்றன. இந்த முயற்சிகளுக்குப்பின், நாடு முழுவதையும் இணைக்கும் ஏராளமான சாலைகள் உருவான நிலையில்தான், அவற்றை அடையாளப்படுத்த எண்கள் வழங்கப்பட்டன. முக்கிய-பெரிய நெடுஞ்சாலைகள் ஒன்று, இரண்டு இலக்க எண்களாலும், பிற சாலைகள் மூன்றிலக்க எண்களாலும் குறிப்பிடப்படுகின்றன. இரண்டு இலக்கம் வரைகொண்ட பெரிய சாலைகளில், ஒற்றை(ஒற்றைப்படை) எண்கள் வடக்கு-தெற்காகச் செல்லும் சாலைகளையும், இரட்டை(இரட்டைப்படை) எண்கள் கிழக்கு-மேற்காகச் செல்லும் சாலைகளையும் குறிக்கின்றன. பிற நாடுகளுக்கு முன்னோடியாக இவற்றை உருவாக்கிய அமெரிக்காதான், இன்றும் உலகிலேயே அதிகச் சாலைகளைக்கொண்ட நாடு. சீனா மூன்றாமிடத்திலிருந்தாலும், மிக அதிக விரைவுச் சாலைகளைக்கொண்ட நாடாக உயர்ந்திருக்கிறது. இந்தியா இரண்டாமிடத்தில் இருந்தாலும், மிகக்குறைந்த தொலைவிற்கே விரைவுச்சாலைகளை அமைத்து, காலத்திற்கேற்ற முன்னேற்றத்தை அடையாமல் பின்தங்கியிருக்கிறது.

சத்தியவாணி முத்து நினைவு நாளின்று சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த அந்த 1940 -களிலேயே… அரசியலில் காலடி பதித்து, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து, கடைசிவரை ஓர் ஆளுமையாகவே வாழ்ந்து முடித்த வெகுசிலரில், குறிப்பிடத்தக்க ஒருவர் சத்தியவாணி முத்து! ஆரம்பத்தில் அம்பேத்கரின், அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பில் செயல்பட்ட சத்தியவாணி, கூடவே பகுத்தறிவு இயக்கத்தோடும் தொடர்பிலிருந்தார். 1949-ல் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டவர், இயக்கத்தின் முதன்மையான பெண் தலைவர் என பரிமளித்தார். இந்தி எதிர்ப்பு, குலக்கல்வி திட்ட எதிர்ப்பு என்று பல போராட்டங்களுக்கும் பெண்களைத் திரட்டி தீவிரமாகக் களத்தில் நின்ற சத்தியவாணி, பல தடவை சிறையிலும் அடைக்கப்பட்டார். சென்னை, மாநகராட்சியில் பணியாற்றிய எம்.எஸ்.முத்து என்பவருக்கு சத்தியவாணியை மணமுடித்தனர். திருமணத்தை திரு.வி.க. முன்னின்று நடத்தினார். 1957-ம் ஆண்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கி வெற்றிபெற்ற சத்தியவாணி முத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறால் முத்து மறைந்துவிட்ட நிலையிலும், அரசியலில் தன்னுடைய தீவிரத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை சத்தியவாணி முத்து. 1967-ம் ஆண்டு, தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. சத்தியவாணி முத்து, எட்டு பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியலில் ஒரே பெண்ணாக இடம்பிடித்தார். அலுவல் சார் வெளிநாட்டுப் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். ‘என்னுடைய அமைச்சரவையின் சகா மேற்கொள்ளும் முதல் பயணம்’ என்று அவரை வழியனுப்பவும், மீண்டும் வரவேற்கவும் நேரில் சென்றார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்குக் காரணம்… சத்தியவாணி முத்துவின் அபரிமிதமான ஆளுமைதான்! அண்ணா மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் தலைமையிலான அரசிலும் அமைச்சராக நீடித்த சத்தியவாணி, ஆதிதிராவிடர் நலத்துறை, மீன் வளத்துறை, சுகாதாரத் துறை, செய்தித் துறை என்று பல துறைகளிலும் பொறுப்புடன் பணியாற்றினார். ‘ஐந்து லட்ச ரூபாய் நிதியை ஒருவர் திரட்டிக் கொடுத்தால், அரசாங்கம் புதிதாக ஒரு கல்லூரியைத் தொடங்கும். அவர்க்ள் விரும்பும் பெயரும் கல்லூரிக்குச் சூட்டப்படும்’ என்று அப்போது அரசு அறிவித்திருந்தது. நட்சத்திர இரவு, நட்சத்திர கிரிக்கெட் போட்டி போன்றவற்றை எம்.ஜி.ஆர் மூலமாக நடத்திய சத்தியவாணி முத்து, நிதியைத் திரட்டிக்கொடுக்க, இந்தியாவிலேயே முதல்முறையாக அம்பேத்கர் பெயரில் தமிழகத்தில் கல்லூரி தொடங்கப்பட்டது. கருணாநிதியிடம் தொடக்கத்திலிருந்தே நட்பு பாராட்டிவந்த சத்தியவாணிதான், அண்ணா மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கு கருணாநிதியின் பெயரை வழிமொழிந்தவர்களில் முக்கியமானவர். அதேசமயம், 1974-ம் ஆண்டு, தன்னுடைய ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு குறித்து சட்டமன்றத்திலேயே கருணாநிதியை எதிர்த்துக் கேள்வி எழுப்பினார். `அண்ணா, அம்பேத்கர் வழியைப் பின்பற்றாது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவதன் மூலம் அந்த மக்களை வஞ்சிக்கிறார் கருணாநிதி’ என்று குற்றம்சாட்டினார்.பிரச்னை பெரிதாக வெடிக்கவே, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் இதை அடுத்து தனிக் கட்சி தொடங்கி அதை கலைத்து விட்டு அதிமுகவில் ஐக்கியமாகி கலைத்துவிட்டு, அ.தி.மு.க-வில் உறுப்பினரானார் சத்தியவாணி முத்து. 1979-ம் ஆண்டு சரண்சிங் பிரதமராகப் பதவியேற்றபோது, மத்திய அமைச்சராக்கப்பட்டார். இறுதி மூச்சுவரை பெரியாரின் கொள்கையைப் பின்பற்றிய சத்தியவாணி முத்து, `அன்னை’ என்கிற இதழை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திவந்தார். ‘எரிக்கப்பட்டாள்’, ‘எனது போராட்டம்’ என்கிற நூல்களையும் எழுதியுள்ளார்.

அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நினைவு நாளின்று அபூ அம்மார் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். 1994-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர். அரபாத் சுயநிர்ணய- பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர். அவர் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு பல தசாப்தங்கள் மோதலுக்கு முடிவு எட்ட முயற்சித்தார். 2004-ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் கூட்டத்தில் வாந்தி எடுத்தார். துனிசியா, ஜோர்டானிய மற்றும் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் பெர்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நவம்பர் 3-ம் நாள் கோமா நிலைக்குச் சென்றார். இதே நவம்பர் 11 அன்று தனது 75-வது வயதில் அவர் இறந்துவிட்டார்.

ஆச்சார்ய கிருபளானி பிறந்த தினம் சுதந்திரப் போராட்ட வீரராகவும், சிறந்த தேசப் பற்றாளராகவும் திகழ்ந்தவர் ஆச்சார்யா ஜீவத்ராம் பகவான்தாஸ் கிருபளானி. 1888 இதே நவம்பர் 11-ல் (தற்போது பாகிஸ்தானில் உள்ள) சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் நகரில் பிறந்தார். ஹைதராபாதிலேயே ஸ்கூல் லைபை முடிச்ச கிருபளானி, பாம்பே-யாக இருந்த மும்பையில் உள்ள வில்ஸன் காலேஜில் மேல்படிப்பு படித்தார். தொடர்ந்து பூனாவின் பெர்குஸன் கல்லூரியில் வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் முதுகலை பயின்றார். பிஹாரின் முசாஃபர்பூர் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் வரலாற்றுப் பேராசிரியராக ஒர்க் பண்ணினார் . 1917-ல் மகாத்மா காந்தி நடத்தின சம்பரண் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது காந்தியின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அப்பாலே 1920-ல் காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக் கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்தி தொடங்கிய ஆசிரமங்கள் மூலம் கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் முனைப்புடன் பங்கேற்றார். இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.அதே சமயம் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாகக் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செஞ்சுட்டார். 1951-ல் காங்கிரஸிலிருந்து வெளியேறி கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது கட்சியை சோஷலிஸக் கட்சியுடன் இணைத்து, பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கினார். 1962-ல் சீனாவுடனான போரில் இந்தியா தோற்றதைக் கண்டித்து, பிரதமர் நேரு மீது முதன்முதலாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் இவர். அதேபோல், 1975-ல் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையின்போது அரசை விமர்சித்ததால் கைதுசெய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர். காந்தியின் மீது அளவற்ற பற்று கொண்டிருந்த கிருபளானி, ‘காந்தி: ஹிஸ் லைஃப் அண்ட் தாட்’ உட்பட பல நூல்களையும் எழுதியிருக்கிறார். கிருபளானியின் மனைவி சுசேதா கிருபளானியும் அரசியல் தலைவர் தான். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுசேதாதான் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண் முதல்வர். தனது வாழ்க்கையில் பல அரசியல், சமூக மாற்றங்களைக் கண்ட கிருபளானி 1982-ல் மறைஞ்சார்.

தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகையும், முதல் பெண் இயக்குநருமான டி.பி.ராஜலட்சுமி பர்த் டே டுடே ! “வாழ்க்கையில் எம்புட்டு தடை வந்தாலும், அவிகள நாமாக எதிர்கொள்ளோணு ம். யாரிடமும் உதவி கோரப் படாது” – இப்படித் தன் மவ கமலாவிடம் சொன்னவர் டி.பி.ராஜலட்சுமி. தமிழ் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகை. திரைப்படம் தயாரித்த, இயக்கிய முதல் பெண்ணும்கூட! திருவாரூரை அடுத்த சாலியமங்கலத்தில் 1911-ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார் ராஜலட்சுமி. அப்பா பஞ்சாபகேசன், அன்றைய வழக்கப்படி மகளுக்கு ஏழு வயசு ஆனதும் முத்துமணி என்பவருக்குத் மேரேஜ் செஞ்சு வைச்சார். ரெண்டு குடும்பங்களுக்கும் இடையே பிணக்கு வந்ததால், ஹஸ்பெண்ட் வூட்டுக்குச் செல்லாமலே இருந்தார் சிறுமி ராஜலட்சுமி. மனசு உடைஞ்சு பஞ்சாபகேசன் இறந்துபோக, ஆதரவின்றி விடப்பட்டனர் அம்மாவும் மகளும். அதை அடுத்து வாழ வழி தேடி, திருவாரூரில் இருந்து திருச்சிக்கு நடந்தே பயணப்பட்டாய்ங்க இருவரும். ஏழ்மையில் உழன்ற சிறுமி ராஜலட்சுமிக்குக் கடவுள் கொடுத்த கொடை – அவரது குரல்வளம். அருமையாகப் பாடக்கூடிய திறமையும் ஆர்வமும் இருந்ததால், சி.எஸ். சாமண்ணாவின் நாடகக் குழுவின் முதல் நடிகையாக அரிதாரம் பூசிக்கிட்டார், பத்து வயதுச் சிறுமி ராஜலட்சுமி. அடுத்த வருசமே இவரை டைவோர்ஸ் செய்தார் ஹஸ்பெண்ட் முத்துமணி. சற்றும் அசரலை இந்தச் சாதனைக் குட்டிப் பெண். தொடர்ந்து சாமண்ணாவின் குழுவில் நடிச்சார். அதன்பின் பல குழுக்களில் நடிப்பு. பால பார்ட், ஸ்த்ரீபார்ட்,நாயகன் எனப் பத்து வருடங்களா நாடக உலகைக் கலக்கிவந்தார். ரங்கூன், சிங்கப்பூர் என வெளிநாடுகளிலும் தமிழ் நாடகங்களில் மேடையேறினார். 1929-ம் ஆண்டு ஏ.நாராயணன் தயாரித்த `கோவலன்’ என்ற சலனப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் ராஜ லட்சுமி. ராஜா சாண்டோ இயக்கிய ராஜேஸ்வரி, உஷா சுந்தரி என அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைச்சுது. 1931-ம் வருசம் , `குறத்தி பாட்டும் நடனமும்’ குறும்படத்தில் குறத்தி வேடம் போட்டு , பாடி ஆடி நடிச்சார் ராஜலட்சுமி. அதைக் கண்ட புரொடியூஸர் அர்தேஷிர் இரானி அதே வருசம் ஹெச்.எம்.ரெட்டி டைரக்ட் செஞ்ச `காளிதாஸ்’ எனும் பேசும் படத்தில் ராஜலட்சுமியைக் கதாநாயகியாக்கினார். காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த காலமது. `காளிதாஸ்’ படத்தில், `காந்தியின் கைராட்டினமே’ என்ற நாட்டுப்பற்றுப் பாடலைப் பாடி ஆடி நடிச்சார் ராஜலட்சுமி. படத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லைன்னாலும் , நாட்டுப்பற்றுப் பாடலை ரசிச்சாய்ங்க ஜனங்க. மெட்ராஸ் சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு முதல் படம் திரையிடப்பட்ட கினிமா சென்ட்ரல் டாக்கீஸ் தியே ட்டர் வரை, படப்பெட்டிக்கு வழிநெடுக மலர் தூவி, தேங்காய் உடைச்சு, கற்பூரம் காட்டினாய்ங்க ரசிகர்கள். அப்படியாக தமிழகத்தின் முதல் பெண் நட்சத்திரமாக உருவெடுத்தார் ராஜலட்சுமி. அதன்பின் வரிசையா சம்பூர்ண அரிச்சந்திரா, ராமாயணம், சாவித்திரி சத்தியவான், கோவலன், வள்ளி திருமணம், திரௌபதி வஸ்திராபரணம், பக்த குசேலா, குலேபகாவலி என நிறைய படங்களில் நடிச்சார். இதற்கிடையே `வள்ளி திருமணம்’ படத்தில் தன்னுடன் நடித்த டி.வி.சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டார் ராஜலட்சுமி. கமலா என்ற பெண் குழந்தை இவர்களுக்குப் பிறந்தது. படங்களில் நடிச்சிகிட்டே ‘கமலவல்லி’ அப்படீங்கற சமூக நாவல் ஒன்றையும் எழுதினார் ராஜலட்சுமி. பின்னர் 1936-ம் ஆண்டு ஸ்ரீ ராஜம் டாக்கீஸ் என்னும் நாம கரணத்தில் பட நிறுவனத்தைத் தொடங்கிய ராஜலட்சுமி, தன் முதல் படமாக மகளின் பெயரிலேயே ‘மிஸ் கமலா’வை டைரக்ட் & , கதாநாயகியாக நடிச்சார். சமூக நாவலில் இருந்து திரைக்கு வந்த முதல் கதையை எழுதிய பெண் எழுத்தாளர் என்கிற பெருமையையும் பெற்றார். படம் வசூலை வாரிக் குவிச்சுது. அடுத்து எல்லீஸ் டங்கன் இயக்கிய `சீமந்தினி’ படத்தில் நடித்தார். தன் சுயசரிதையில், `ராஜலட்சுமி ஓர் அருமையான நடிகை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டங்கன். 1938-ல் கிருஷ்ண லீலை கதையை ‘நந்தகுமார்’ எனும் படமாக எடுத்தார் மராத்திய இயக்குநர் கேஷவ் ராவ் தைபார். படத்தின் மராத்திய மொழி வடிவத்தில், கச்சை அணிந்து நடிக்கும் காட்சியில் எந்தச் சலனமும் இல்லாமல் நடித்து முடிச்சார் மராத்திய நடிகை துர்கா கோட்டே. தமிழ் மொழிக் காட்சிகளில் நடிக்க வேண்டிய ராஜலட்சுமி, அரைகுறையான கச்சை அணிந்து நடிக்க மறுத்து, வெளிநடப்பு செய்வதாகச் சொல்லிப்புட்டார். இறுதியில், 1930-களில் ஃபேஷனாக இருந்த உடலை முழுக்க மூடிய பூனா ‘ஜம்பர்’ பிளவுஸ் அணிந்து நடிக்க ஒப்புக்கிட்டார் ராஜலட்சுமி. அப்பாலே `பக்த குமரன்’, `தமிழ்த் தாய்’ உள்பட சில படங்களில் நடிச்சார். வாய்ப்புகள் குறையத் தொடங்கிச்சு. சென்னை கீழ்ப்பாக்கத்தில் சொகுசு பங்களாவில் வசிச்சத ராஜலட்சுமி குடும்பம் சிறிது சிறிதாக நொடித்துப்போகத் தொடங்கிச்சு. இதன் பிறகு ராஜா சாண்டோ இயக்கிய `வசந்த சேனா’ என்ற படத்தைத் தயாரிச்சார். `விமலா’ அப்படீன்னு இன்னொரு நாவலையும் எழுதினார். 1950-ல் `இதய தாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. படம் பெரிசா வெற்றி பெறலை. அத்துடன் பட வாய்ப்புகள் முற்றிலும் நின்றுபோயிடுச்சு. ஒருகட்டத்தில் சொத்துகள் கைவிட்டுச் செல்வதை அறியாத ராஜலட்சுமியைச் பக்கவாத நோயும் தாக்கிபுடுச்சு. கிட்டத்தட்ட ஒரு தெருவையே சொந்தமாக வைச்சிருந்த குடும்பம், வாடகை வீட்டுக்குக் ஷிப்ட் ஆச்சு. கலைமாமணி விருதின் தங்கத்தை உருக்கி, பேரனுக்கு முதல் பிறந்த நாள் பரிசாக மோதிரம் போடும் நிலை. இதற்கு மேல் துன்புறாமல், 1964-ம் ஆண்டு மரணமடைஞ்சார் ராஜலட்சுமி. ஆக.. இந்த சினிமா ஒருவரை எத்தகைய உயரத்துக்கும் அழைத்துச் செல்லும், எத்தகைய குழிக்குள்ளும் தள்ளும். இந்த இரு எல்லைகளையும் பார்த்து, தன் ஏழ்மையைப் பிறர் அறியாமல் நேர்மையுடனே எதிர்கொண்டு வாழ்ந்த சாதனைப் பெண் டி.பி.ராஜலட்சுமியை ஆந்தை குழுமம் நினைவில் ஏந்தி பிறந்த நாள் வாழ்த்து சொல்லி நினைவஞ்சலி செலுத்துகிறது !

எஸ்.ஏ.அசோகன் நினைவு நாள் கதாநாயகன், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ்ப்பட உலகைக் கலக்கியவர் அசோகன்..எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர். அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து “பி.ஏ” பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார். பின்னர் சினிமாவில் நுழைந்த அவர், சில படங்களில் குணசித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார். அவ்வையார், மாயமனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், ரிக்ஷாக்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப்பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன். அசோகன் அதிகமாக நடித்தது எம்.ஜி.ஆர். படங்களில்தான். 88 எம்.ஜி.ஆர். படங்களில் அவர் நடித்துள்ளார். ஏ.வி.எம். மற்றும் தேவர் பிலிம்சார் தயாரித்த பெரும்பாலான படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார். திரை உலகத்தினர் அனைவருடனும் இனிமையாக பழகக்கூடியவர். அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். 1963-ல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அசோகன் நடித்தார். சரவணா பிக்சர்ஸ் ஜி.என். வேலுமணி இப்படத்தை தயாரித்தார். டைரக்ஷன் கே.சங்கர். வசனம்: மா.லட்சுமணன். இசை: விசுவநாதன் ராமமூர்த்தி. இந்தப்படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அடுத்த 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த “தெய்வத்திருமகள்” என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. அடுத்து 1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த (தண்டாயுதபாணி பிலிம்ஸ்) “காட்டு ராணி”. இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். டைரக்டர் எம்.ஏ.திருமுகம். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்”. அசோகன்- வசந்தா நடித்திருந்தனர். மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” படத்தில் அசோகன்-மணிமாலா இணைந்து நடித்தார்கள். இது வெற்றிப்படமாகும். அதன் பின்னர் வில்லன் வேடங்களிலேயே ஏராளமான படங்களில் நடிக்கலானார். அசோகன் தனது மூத்த மகன் பெயரில் “அமல்ராஜ் மூவிஸ்” என்ற படக்கம்பெனி தொடங்கினார். அதன் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “நேற்று இன்று நாளை” என்ற படம் தயாரித்து வெளியிட்டார். இரவும் பகலும் என்ற படத்தில் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார். அசோகனுக்கு 1982-ம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 3 மாதம் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்றார். 11-11-1982 அன்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து அவரை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. அன்று இரவு 9.35 மணி அளவில் அசோகன் உயிர் பிரிந்தது. கிறிஸ்தவரான அசோகன் இந்து மதத்தைச் சேர்ந்த சரஸ்வதியை காதலித்து மணந்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு அமல்ராஜ், வின்சென்ட் என்ற 2 மகன்கள். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில், கிறிஸ்தவ முறைப்படி அசோகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். இரங்கல் அசோகன் மரணம் அடைந்தபோது முதல்-அமைச்சர் எம்.ஜி. ஆர். டெல்லியில் இருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி. ஆர். வெளியிட்ட அனுதாப செய்தியில் கூறியிருந்ததாவது:- “நடிகர் அசோகனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் என்னுடைய இனிய நண்பர். கலை உலகம் ஒரு நல்ல கலைஞரை இழந்துவிட்டது. அசோகனின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறி இருக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் அனுதாப செய்தி வெளியிட்டார்கள். அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ப.உ.சண்முகம் ஆகியோர் அசோகன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!